சாலை விபத்தில் மோட்டார் வாகன ஒட்டி ஒருவர் பலியான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் குலசேகரவுக்கு ஜாமீன் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை அணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா (34). இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்று விட்ட அவர், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று காலை கண்டியிலிருந்து காரில் கொழும்பு திரும்பும் பொழுது, எதிர்பக்கத்தில் வந்து கொண்டிருந்த மோட்டார் வாகன ஒட்டி ஒருவர், பேருந்து ஒன்றை முந்த முயலும் போது, நிலை தடுமாறி குலசேகராவின் வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குலசேகரா பின்னர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆரம்ப கட்டவிசாரணையில் எதிர்பக்கத்தில் வந்த வாலிபர் பேருந்தை முந்த முயலும்போது கட்டுப்பாட்டை இழந்து, குலசேகராவின் வாகனத்தின் மீது மோதியதாக தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாகக்கொண்டு விசாரணை நிலுவையிலிருக்கும் போது குலசேகரவுக்கு ஜாமீன் வழங்கி கடவத்த முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.