செய்திகள்

உலகக் கோப்பையிலிருந்து என்னை நீக்குமாறு கூறினேன்

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தன்னை நீக்குமாறு அணியின் பயிற்சியாளரிடம் கூறியதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் பந்துவீச்சாளரான ஜூலான் கோஸ்வாமி கூறினார்.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் செளரவ் கங்குலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி கெளரவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
அதைப் பெற்றுக் கொண்ட பிறகு ஜூலான் கோஸ்வாமி பேசியதாவது:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் 2 ஆட்டங்களில் நான் நன்றாக பந்துவீசவில்லை என்று தோன்றியது. எனவே, அணியிலிருந்து என்னை நீக்கிடுமாறு பயிற்சியாளர் துஷார் அரோத்திடம் கூறினேன். ஆனால், என் மீது நம்பிக்கை வைத்த அவர், உரிய ஊக்கமளித்து அணியில் தொடரச் செய்தார்.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அந்த அணியின் கேப்டனும், சிறந்த வீராங்கனையுமான மெக் லேனிங் ஒரு குறிப்பிடத்தக்க விக்கெட். அவரை வீழ்த்துவது தொடர்பாக எங்கள் கேப்டன் மிதாலி ராஜுடன் கலந்தாலோசித்தேன். அவரும் சில நுணுக்கங்கள் தெரிவித்து உதவினார். அதனால் அந்த ஆட்டத்தில் லேனிங்கை டக் அவுட் செய்ய முடிந்தது.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தைப் பொருத்த வரையில், கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு தேவை எழுந்த போதெல்லாம் பயிற்சி வசதிகளை செய்துகொடுத்து உதவியது என்று ஜூலான் கோஸ்வாமி கூறினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் 2 ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத ஜூலான் கோஸ்வாமி, அடுத்து நடைபெற்ற 7 ஆட்டங்களிலும் மொத்தமாக 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT