2012-ல் மேற்கிந்தியத் தீவுகளுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரில் தோற்றது. அதன்பிறகு கடந்த ஐந்து வருடங்களில் மே.இ. அணியால் வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளைத் தவிர வேறெந்த அணியையும் டெஸ்ட் தொடரில் வெல்லமுடியவில்லை.
இந்த நிலையில் நியூஸிலாந்துக்குச் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது மே.இ. அணி. 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. மீண்டும் நியூஸிலாந்தைத் தோற்கடித்து தனது வெற்றிக்கணக்கை மே.இ. அணி தொடங்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.
ஆனால், முதல்நாளே மே.இ. அணிக்குச் சோகமாக அமைந்துள்ளது.
வெல்லிங்டனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
59 ரன்கள் வரை முதல் விக்கெட் விழவில்லை. ஆனால் அடுத்த 75 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் மே.இ. இழந்துவிட்டது. மே.இ. அணி தனது முதல் இன்னிங்ஸில் 45.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான நைல் வேக்னர் பிரமாதமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மே.இ. அணியில் கிரன் பவல் அதிகப்பட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து, முதல் நாளின் முடிவில் 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. ரவல் 29, டெய்லர் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.