சென்னை: 'இந்தியன் சூப்பர் லீக்' எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டித் தொடரில் விளையாடும், 'சென்னையின் எப்சி' கால்பந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக, உலகப்புகழ் பெற்ற பயிற்சியாளர் ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரினைப் போன்றே நாடு முழுவதும் இருந்து கால்பந்து அணிகள் பங்கு பெறும் 'இந்தியன் சூப்பர் லீக்' எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டித் தொடரானது 2015-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்த போட்டித் தொடரில் சென்னையினை பிரதிபலிக்கும் வகையில் 'சென்னையின் எப்சி' என்ற கால்பந்து அணி பங்கேற்கிறது. ஆரம்ப சீசனில் இந்த அணிக்கு தலைவர் மற்றும் பயிற்சியாளர் என்ற இரண்டு பாத்திரங்களை ஏற்று, இத்தாலி வீரரான மார்கோ மேட்டரசி பணியாற்றினார். அவரது தலைமையில் 2015-ஆம் ஆண்டு சென்னை அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது.
இந்நிலையில் விரைவில் துவங்கவுள்ள புதிய சீசனில் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1972-ஆம் ஆண்டுமுதல் கால்பந்து விளையாடி வரும் கிரிகோரி, வீரராக மட்டும் இன்றி பயிற்சியாளராகவும் சிறப்பாக செயல்பட்டு புகழ்பெற்றவராவார்.
அவரது நியமனம் தொடர்பான அறிவிப்பினை சென்னை அணியின் துணை உரிமையாளரான விட்டா டேனி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். புதிய பொறுப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும், வீரர்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாகவும் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.