செய்திகள்

சுதிர்மான் கோப்பை: காலிறுதியில் இந்தியா தோல்வி

DIN

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் சீனாவை எதிர்கொண்ட இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெளியேறியது.
இது, சுதிர்மான் கோப்பை போட்டியின் காலிறுதியில் இந்தியா சந்திக்கும் 2-ஆவது தோல்வியாகும். முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு காலிறுதியிலும் சீனாவிடமே தோல்வி கண்டது இந்தியா.
இரு நாட்டு அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில், முதலில் கலப்பு இரட்டையர்களுக்கான ஆட்டம் நடைபெற்றது. இதில், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி, உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் லு காய்-ஹுவாங் யாகியாங் ஜோடியை எதிர்கொண்டது.
இரு இணைகளுக்கும் இடையே ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சீனாவின் லு காய்-ஹுவாங் யாகியாங் ஜோடி 16-21, 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்றது.
அடுத்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங்கை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே 48 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்ரீகாந்த் 16-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார்.
3-ஆவதாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிரக் சென் ஜோடி, சீனாவின் ஃபு ஹாய்ஃபெங்-ஸாங் நான் ஜோடியிடம் 9-21, 11-21 என்ற செட் கணக்கில் அரைமணி நேரத்தில் வீழ்ந்தது.
இதனால், மொத்தம் உள்ள 5 ஆட்டங்களில் சீனா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால், எஞ்சிய இரு ஆட்டங்களும் கைவிடப்பட்டன. அதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடியும் விளையாடுவதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT