முகப்பு
செய்திகள்

113 ரன்களுக்குச் சுருண்ட இந்திய மகளிர் அணி: இங்கிலாந்து அணி வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி கண்டது.

நாகபுரியில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

எனினும் இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சால் 9-வது ஓவர் முதல் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. மந்தனா அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். 3 வீராங்கனைகள் தவிர இதர வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி கடும் நெருக்கடியைச் சந்தித்தது.

கடைசியில், 37.2 ஓவர்களில் 113 ரன்களுக்கு இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேனீல் ஹஸல், சோபி எக்லஸ்டோன் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது இங்கிலாந்து அணி.

இந்திய அணியால் 15-வது ஓவரில்தான் முதல் விக்கெட்டை வீழ்த்தமுடிந்தது. 47 ரன்கள் எடுத்த வியாட்டின் விக்கெட்டை வீழ்த்தினார் ஏக்தா. இதன்பின்னர் ஏமி ஜோஸ் டக் அவுட் ஆனாலும் 39 ரன்களுடன் டேமியும் 26 ரன்களுடன் ஹெதர் நைட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இங்கிலாந்து அணி, 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து
வெற்றி பெற்றது. 

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி, வியாழன் அன்று நாகபுரியில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.