இங்கிலாந்து பேட்டிங்: கோலியின் அணித்தேர்வில் சில ஆச்சர்யங்கள்!
சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் அணியில் இடம்பெற்ற நிலையில் குல்தீப் யாதவ்...
பர்மிங்ஹாம் எட்பாஸ்டனில் இன்று தொடங்கியுள்ள முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட்அணி.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டி 20 தொடரை வென்ற நிலையில், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.
இறுதியாக கடந்த 2007-ல் டிராவிட் தலைமையிலான அணி 1-0 என இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களுடைய மண்ணில் வென்றிருந்தது. தோனி தலைமையில் 2011, 2014-ல் முறையே 4-0, 3-1 என இந்தியா தோல்வியைத் தழுவியது.
Advertisement
இந்நிலையில் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் ஒரே சுழற்பந்துவீச்சாளராக அடில் ரஷித் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அணியின் துணை கேப்டனாக பட்லர் அறிவிக்கப்பட்டார். இது இங்கிலாந்து அணி விளையாடும் 1000-வது டெஸ்ட்.
இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சில ஆச்சர்யத்தக்க மாற்றங்களை உருவாக்கியுள்ளார் கேப்டன் கோலி.
புஜாரா அணியில் இடம்பெறவில்லை. அதேபோல சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் அணியில் இடம்பெற்ற நிலையில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை. முரளி விஜய், தவன், ராகுல் என மூவரும் அணியில் உள்ளார்கள். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பாண்டியா ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். ரஹானாவும் அணியில் உள்ளார்.
இந்திய அணி
விஜய், தவன், ராகுல், கோலி (கேப்டன்), ரஹானே, தினேஷ் கார்த்திக், பாண்டியா, அஸ்வின், உமேஷ் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மா.
இங்கிலாந்து அணி
ஜோ ரூட் (கேப்டன்), அலாஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், அடில் ரஷித், சாம் கர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.