முகப்பு
செய்திகள்

தீவிரவாதக் குற்றச்சாட்டில் நண்பரைச் சிக்கவைக்க முயன்ற பிரபல ஆஸி. வீரரின் சகோதரர் கைது!

ஒரு பெண் தொடர்பாக இருவருக்கும் உண்டான பகையில் நிஜாமுதீனைச் சிக்க வைக்க பொய்யான தீவிரவாதச் செயல் பற்றிய குறிப்புகளை...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதர் அர்சலன் கவாஜா. இவருடைய நண்பர் தீவிரவாதச் செயலுக்குத் திட்டமிடுவதாகப் போலியாக உருவாக்கிய ஆவணங்களால், கவாஜாவின் சகோதரை ஆஸ்திரேலியக் காவல்துறை கைது செய்துள்ளது.

சிட்னியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல்லைக் கொலை செய்வதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கமீர் நிஜாமூதீனைக் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸி. காவல்துறை கைது செய்தது. ஆனால் இலங்கையைச் சேர்ந்த நிஜாமுதீன் எழுதியதாக நம்பப்பட்ட தாக்குதல் குறித்த குறிப்புகளை கவாஜாவின் சகோதரர் அர்சலன் எழுதியதாகக் காவல்துறை கண்டுபிடித்தது. தவறாகக் கைது செய்யப்பட்ட நிஜாமுதீன் கடந்த அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டார். அவருக்கு வழக்கு தொடர்பாக ஏற்பட்ட செலவுகளைக் காவல்துறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு பெண் தொடர்பாக இருவருக்கும் உண்டான பகையில் நிஜாமுதீனைச் சிக்க வைக்க பொய்யான தீவிரவாதச் செயல் பற்றிய குறிப்புகளை அர்சலன் எழுதியதாக விசாரணையில் காவல்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து முறையற்ற நடத்தைக்காகவும் பொய்யாக ஆவணம் தயாரித்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டில் சிக்க வைக்க முயன்றதற்காகவும் 39 வயது அர்சலனைக் காவல்துறை கைது செய்தது. பிறகு அர்சலன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

தன்னுடைய சகோதரர் கைதானது குறித்து உஸ்மான் கவாஜா கூறியுள்ளதாவது: இந்த வழக்கைக் காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக என்னால் கருத்து எதுவும் கூறமுடியாது. எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →