வேகம் குறைக்கப்பட்ட யார்க்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்த மார்ஷ்: பூம்ராவைப் புகழும் கிரிக்கெட் உலகம்!
ஒருநாள் கிரிக்கெட்டில் வீசுவதுபோல வேகம் குறைந்த பந்தை வீசுமாறு மிட் ஆஃப்-பில் இருந்த ரோஹித் சர்மா...
மெல்போர்ன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பூம்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற உதவினார்.
ஷான் மார்ஷை வேகம் குறைக்கப்பட்ட யார்க்கர் வீசி ஆட்டமிழக்கச் செய்தார் பூம்ரா. கிரிக்கெட் உலகில் இந்தப் பந்தைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. பூம்ராவைக் கொண்டாடும் அளவுக்கு அந்த விக்கெட் அமைந்துவிட்டது.
இதுகுறித்து பூம்ரா கூறியதாவது:
அந்தச் சமயத்தில் ஆடுகளம் மந்தமாக இருந்தது. பந்தும் மென்மையடைந்து விட்டது. எதுவும் நடப்பாகத் தெரியவில்லை. உணவு இடைவேளைக்கு முன்பு நான் பந்துவீசினேன். அந்த ஓவரின் கடைசிப்பந்தின்போது ஒருநாள் கிரிக்கெட்டில் வீசுவதுபோல வேகம் குறைந்த பந்தை வீசுமாறு மிட் ஆஃப்-பில் இருந்த ரோஹித் சர்மா என்னிடம் கூறினார். நானும், ஆமாம்.. அதுபோல முயற்சி செய்யலாம் என எண்ணி அந்தப் பந்தை வீசினேன்.
வேகம் குறைக்கப்பட்ட பந்து சரியாக அமைந்து மார்ஷின் விக்கெட் கிடைத்தது. திட்டம் வெற்றியடைந்தது. ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் 10 ஓவர்கள்தான் வீசுவோம். அதனால் யார்க்கர் பந்தை வீசமுடியும். இது உங்கள் உடல் பலத்தை அதிகம் கோரக்கூடியது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 ஓவர்கள் வீசியபிறகு யார்க்கரை வீசுவது சிரமமானது. மேலும் தவறாக வீசிவிட்டால் பேட்ஸ்மேனால் சுலபமாக ரன் எடுக்கமுடியும். ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கும்போது சரியாக அமையும்.
இந்த வருடம் சிறப்பாகப் பந்துவீசியுள்ளேன். தொடக்கம் நல்லதாக அமைந்துள்ளது. எப்படிப் போகிறது என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.