முகப்பு
செய்திகள்

எல்லா புகழும் வீரர்களுக்கே: பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெருமிதம்

உலகக் கோப்பை வென்ற இந்திய அணி திங்கள்கிழமை நாடு திரும்பியது. இந்த தொடர் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 பிப்ரவரி, 2018 at 8:15 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:40 PM

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை 4-ஆவது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. இதையடுத்து யு-19 இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகிகள் ஆகியோர் திங்கள்கிழமை நாடு திரும்பினர்.

மும்பை விமானநிலையம் வந்தடைந்தவர்களுக்கு பலத்த ஆரவாரம் செய்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அதிக வாழ்த்துகள் குவிந்தன.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் டிராவிட் பேசியதாவது:

Advertisement

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியை சரியான முறையில் உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தினோம். அவ்வகையில் தற்போது மனநிறைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடும் நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்த 15 வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்துள்ளனர். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இறுதிப்போட்டியில் நாங்கள் எங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்த தவறி விட்டோம். இருந்தாலும் இதுபோன்ற பெரிய தொடரின் இறுதிச்சுற்றில் பங்கேற்றது அவர்களுக்கு நிறைய அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு அணியில் பயிற்சியாளரின் தாக்கம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், இந்த எல்லா புகழும் இந்திய அணியின் இந்த இளம் நட்சத்திரங்களையே சேரும். ஏனெனில் களத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, சிறந்த அனுபவத்தை வெளிப்படுத்தி அவர்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர்.

இதற்காக அவர்கள் நிறைய தியாகங்களைச் செய்துள்ளனர். அதற்காக அவர்கள் மட்டுமே அனைத்து புகழுக்கும் சொந்தக்காரர்கள். தற்போது மும்பை வந்து இறங்கியவுடன் ரசிகர்களாகிய நீங்கள் அளிக்கும் ஆதரவு அவர்களுக்கு மேலும் சிறப்பாக செயல்படஉற்சாகம் அளிப்பதாக அமையும். ஏனெனில் இதுவும் ஒரு அனுபவம் தான் என்றார்.

பின்னர் யு-19 இந்திய அணி கேப்டன் பிருத்வீ ஷா, பயிற்சியாளர்களிடம் பேசியதாவது:

இந்த தொடர் எங்களுக்கு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும்போது மூத்த வீரர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவை அனைத்தும் எதிர்காலத்தில் உதவிகரமாக அமையும். சமீபகாலமாக ரஞ்சி மற்றும் உலகக் கோப்பையில் எனது ஆட்டம் நன்றாக அமைந்து வருகிறது. நிறைய ரன்கள் குவித்து வருகிறேன். இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.