செய்திகள்

டெஸ்ட்: இந்தியா 307 ரன்கள்! 153 ரன்கள் எடுத்தார் கோலி!

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. விராட் கோலி 153 ரன்கள் எடுத்தார்.

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இரண்டாம் நாளன்று அந்த அணி 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. கோலி 85, பாண்டியா 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். தொடக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடினாலும் எதிர்பாராத விதமாக 46 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. ராகுல் 10, ரோஹித் சர்மா 10, பார்தீவ் படேல் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.

இன்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய அணிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 152 ரன்கள் பின்தங்கியிருந்தது. நேற்று எடுத்த 85 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி, 146 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 21-வது டெஸ்ட் சதமாகும். 

ஆனால் அடுத்த ஓவரில் பாண்டியா ரன் அவுட் ஆகி இந்திய அணியின் மகிழ்ச்சியைக் குறைத்தார். அதன்பிறகு களமிறங்கிய அஸ்வின், நிதானமாக ஆடாமல் தகுந்த இடைவெளிகளில் பவுண்டரிகள் அடித்ததால் இந்திய அணியின் ஸ்கோர் நன்கு உயர்ந்தது.

62 பந்துகளில் கோலியும் அஸ்வினும் 50 ரன்கள் சேர்த்து பாண்டியாவின் இழப்பினால் பாதிப்பு வராமல் பார்த்துக்கொண்டார்கள். அரை சதமெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின், புதிய பந்தில் வீழ்ந்தார். 38 ரன்களில் பிளாண்டர் பந்துவீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷமி 1 ரன்னில் மார்கல் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.

3-வது நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 141 ரன்களுடனும் இஷாந்த் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். 

இதன்பிறகு 20 பந்துகள் வரை தாக்குப்பிடித்த இஷாந்த் சர்மா, 3 ரன்களில் மார்கல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசியில் விராட் கோலி தனது அற்புதமான பேட்டிங்கை 153 ரன்களில் முடித்துக்கொண்டார். மார்கல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடித்து இந்திய அணி 92.1 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணித் தரப்பில் மார்கல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT