ரன் அவுட்: புஜாராவின் விநோத சாதனை!
ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆன முதல் இந்திய பேட்ஸ்மேன் என்கிற விநோத சாதனைக்கு...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 36-வது ஓவரின்போது 6 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்துடன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 23 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. பார்திவ் (5 ரன்கள்), புஜாரா (11 ரன்கள்) களத்தில் இருந்தார்கள்.
இந்திய அணி புஜாரா மீது மிகுந்த நம்பிக்கை வைத்த நிலையில் முதல் இன்னிங்ஸைப் போல இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளார் புஜாரா.
இதன் மூலம் புஜாரா சில விநோத சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுவரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆனதில்லை. இதன் அடிப்படையில் ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆன முதல் இந்திய பேட்ஸ்மேன் என்கிற விநோத சாதனைக்கு உள்ளாகியுள்ளார் புஜாரா.
ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆன பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை - 23. கடந்த 17 வருடங்களில் இப்போதுதான் மீண்டும் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2000-ம் ஆண்டு டிசம்பரில் ஸ்டீபன் பிளமிங் இதுபோல ஒரே டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆனார்.