செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: 20-ஆவது கிராண்ட்ஸ்லாம்: ஃபெடரர் சாதனை 

DIN

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இது, ஃபெடரர் வெல்லும் 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதேவேளையில் இது அவரின் 6-ஆவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம்.
டென்னிஸின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 20 பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை ஃபெடரர் பெற்றுள்ளார்.
மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஃபெடரர் 6-2, 6-7(5/7), 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச்சை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 3 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வெற்றி பெற்ற ஃபெடரர் உணர்ச்சி வசத்தில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.
இந்த இறுதி ஆட்டத்தில் சிலிச்சின் சர்வ்களை 6 முறை பிரேக் செய்த ஃபெடரர், தனது 2 சர்வ்களை அவரிடம் இழந்தார். மொத்தமாக ஃபெடரர் 24 ஏஸ்களையும், சிலிச் 16 ஏஸ்களையும் பறக்க விட்டனர்.
கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளபோதும், சர்வதேச தரவரிசையில் நடாலுக்குப் பிறகான 2-ஆவது இடத்திலேயே நீடிக்கிறார் ஃபெடரர். மறுபுறம் சிலிச், முதல் முறையாக 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், "மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் என்னால், இந்தப் பட்டம் வென்றதை நம்ப இயலவில்லை. ஒரு கனவு நனவானதைப் போல உள்ளது. இந்த ஒருநாளில், இந்த வெற்றித் தருணத்தை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறேன். இந்த இறுதி ஆட்டம் 2006-ஆம் ஆண்டு மார்கோஸ் பக்தாதிûஸ வீழ்த்தி பட்டம் வென்ற தருணத்தை எனக்கு நினைவூட்டுகிறது. அதைப் போலவே இந்த இறுதி ஆட்டத்திலும் உணர்ந்தேன்' என்றார்.
இத்துடன் சிலிச்சை 10 முறை நேருக்கு நேர் சந்தித்த ஃபெடரர், தனது 9-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். முன்னதாக, 2014 அமெரிக்க ஓபன் அரையிறுதியில் ஒரு முறை சிலிச்சிடம் வீழ்ந்துள்ளார் ஃபெடரர். தோல்விக்குப் பிறகு பேசி சிலிச், "இந்த ஆட்டத்தின் 5-ஆவது செட்டை ஃபெடரர் அருமையாக ஆடினார். 
ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிச்சுற்று வரை முன்னேறியது அற்புதமான பயணமாக இருந்தது. இந்த இரு வாரங்கள் எனது வாழ்வின் சிறந்த நாள்களாகும். இந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன்' என்றார்.

சாதனைத் துளிகள்...

இந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனை அதிகமுறை வென்ற (6 முறை) வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் 3-ஆவதாக இணைந்துள்ளார் ஃபெடரர்.

இப்போட்டியில் தனது தொடக்க சுற்று முதல் அரையிறுதி ஆட்டம் வரையில் ஃபெடரர் ஒரு செட் கூட இழக்காமல் நேர் செட்களில் வென்று வந்தார். எனினும், இறுதி ஆட்டத்தில் அவர் சிலிச்சிடம் 2 செட்களை இழந்தார். 

ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் ஃபெடரர் மொத்தமாக 94 வெற்றி, 13 தோல்விகளை பதிவு செய்துள்ளார். அதுவே, ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமாக அவர் 332 வெற்றிகளையும், 52 தோல்விகளையும் பெற்றுள்ளார்.


மேற்கூரையை மூடியதற்கு சிலிச் அதிருப்தி

இறுதிச்சுற்று தொடங்கும் நேரத்தில் அதிகபட்ச வெப்பத்தின் காரணமாக, மைதானத்தின் மேற்கூரை மூடப்பட்டது. இது தனக்கான ஒரு பின்னடைவாக இருந்ததாக சிலிச் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தப் போட்டி முழுவதுமாக திறந்தவெளியில் வெப்பமான சூழலில் விளையாடி வந்தேன். எனவே, அதற்கேற்றவாறே இறுதிச்சுற்றுக்கும் என்னை தயார்படுத்தியிருந்தேன். 
இந்த இறுதி ஆட்டமே மேற்கூரையை மூடிய ஆடுகளத்தில் நான் விளையாடிய முதல் ஆட்டமாகும். மேற்கூரை மூடப்பட்டதால் அந்தச் சூழல் எதிர்பார்த்ததைவிட மிகவும் குளிர்ச்சியாக மாறியது. இந்த மாற்றத்தால் ஆடுவதற்கு சற்று கடினமாக உணர்ந்தேன். இதனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் என்னை தகவமைத்துக் கொள்வதற்காக சிறிது நேரம் பிடித்தது. இறுதி ஆட்டத்தின்போது இதுபோன்ற சூழலை எதிர்கொள்வது கடினமான ஒன்றாகும்' என்றார்.

பாவிச்-கேப்ரியேலாவுக்கு கோப்பை

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் மேட் பாவிச்-கனடாவின் கேப்ரியேலா டப்ரெüஸ்கி ஜோடி சாம்பியன் ஆனது. முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஹங்கேரியின் டிமியா பேபோஸ் இணை 6-2, 4-6, 9-11 என்ற செட்களில் பாவிச்-கேப்ரியேலா ஜோடியிடம் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT