சென்னைக்கு வந்தார் இளம் கிராண்ட் மாஸ்டர்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா, செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்...
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா, செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். இதையடுத்து, உலகளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆகிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்ட முடியவில்லை. எனினும் இதற்கு முன்பு, இந்தியாவின் நெகி, 13 வருடம், 4 மாதம் 22 நாள்களில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அவருடைய சாதனையைத் தகர்த்து, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா. இதற்கு முன்பு, 10 வயதில் (10 வருடம் 9 மாதங்களில்) சர்வதேச மாஸ்டராகி சாதனை செய்தார்.
இத்தாயில் நடைபெற்ற கிரேடின் ஓபன் செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவின் குடும்ப உறுப்பினர்கள், பயிற்சியாளர் ரமேஷ், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்தார்கள்.
Advertisement
செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா கூறியதாவது:
3 வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். ஐந்து வயது முதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் ஆகியோருடன் விளையாட ஆவலாக உள்ளேன். 12 வயதில் கிராண்ட் மாஸ்டரானது மகிழ்ச்சியை அளிக்கிறது. இனிவரும் போட்டிகளில் வழக்கம்போல விளையாடி வெற்றி பெறுவேன் என்றார்.