செய்திகள்

உலக யுனிவர்சேட் போட்டி: டூட்டி சந்த் தங்கம் வென்று சாதனை

DIN


உலக பல்கலைக்கழகங்கள் இடையேயான விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். 
இதன் மூலம் உலக பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை டூட்டி சந்த் பெற்றுள்ளார். 
இத்தாலியின் நபோலி நகரில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய இலக்கை 11.32 விநாடிகளில் எட்டி டூட்டி சந்த் முதலிடம் பிடித்தார். ஸ்விட்சர்லாந்தின் டெல் போன்டே 11.33 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஜெர்மனியின் லியா குவா யீ 11.39 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனர். 
இந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே முன்னிலை பெற்ற டூட்டி சந்த், இறுதிவரை அதை தக்கவைத்துக் கொண்டார். வெற்றிக்குப் பிறகு தனது சுட்டுரையில் பதிவிட்ட டூட்டி சந்த், "என்னை வீழ்த்தினாலும் மீண்டு வருவேன். பல ஆண்டு கடின உழைப்பாலும், அனைவரின் ஆசீர்வாதத்தாலும் இந்த வெற்றியை எட்டியுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார். டூட்டி சந்த், ஓடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா பல்கலைக்கழகத்தின் மாணவியாவார். 
இப்போட்டியில் தங்கம் வென்ற இந்தியர்கள் வரிசையில் 2-ஆவது நபராக டூட்டி சந்த் இடம்பிடித்துள்ளார். முன்னதாக, இந்தியாவின் இந்தர்ஜீத் சிங் கடந்த 2015-ஆம் ஆண்டு சீசனில் ஆடவருக்கான குண்டு எறிதலில்  தங்கம் வென்றிருந்தார். 
அதேபோல், உலக அளவிலான போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய தடகள வீராங்கனை என்ற பெயரும் டூட்டி சந்துக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டதில் தங்கம் வென்ற ஹிமா தாஸ் முதல் வீராங்கனையாவார். 
வாழ்த்து: தங்கம் வென்ற டூட்டி சந்துக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT