செய்திகள்

ஐஎஸ்எல் 2019: பெங்களூரு எஃப்சி சாம்பியன்

DIN

மும்பையில் நடைபெற்ற ஐஎஸ்எல் 2019 கால்பந்து இறுதிப் போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவா எஃப்சியை வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
 இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ஐ லீக், ஐஎஸ்எல் போட்டிகள் ஏஐஎப்எப்பால் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஐஎஸ்எல் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது.
 கடந்த 4 சீசன்களில் கொல்கத்தா, சென்னையின் அணிகள் தலா 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றன. நிகழாண்டு 5-ஆவது சீசனில் நடப்பு சாம்பியன் சென்னையின் அணி 10-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
 இறுதிச் சுற்றுக்கு பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி மற்றும் கோவா எஃப் சி அணிகள் தகுதி பெற்றன. இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் மும்பை அரேனா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 ஐஎஸ்எல் இறுதிக்கு பெங்களூரு இரண்டாவது முறையாகவும், கோவா முதன்முறையாகவும் தகுதி பெற்றதால் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆதிக்கத்தை செலுத்த முனைந்தனர்.
 பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி, நட்சத்திர வீரர் மிகு, சிஸ்கோ ஆகியோர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். கோவா தரப்பில் கொரோமினாஸ், ஜாக்கிசந்த், பேட்டியா ஆகியோர் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் முதல் பாதி கோலின்றி முடிந்தது.
 இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் தீவிரமாக போராடினர். கோவா அணியின் கட்டுப்பாட்டிலேயே பந்து பெரும்பாலும் இருந்த நிலையிலும் கோலடிக்க இயலவில்லை. 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் கூடுதலாக ஆட்ட நேரம் ஒதுக்கப்பட்டது.
 அதிலும் எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. கோவா வீரர் அகமது ஜஹோ இரண்டாம் முறை தவறு புரிந்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கோவா அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
 இறுதியில் 117ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரர் டிமாஸ் கார்னர் மூலம் அடித்த பந்தை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் ராகுல் பெகே. இதன் மூலம் பெங்களூரு 1-0 என்ற கோல் கணக்கில் வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT