செய்திகள்

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்

சுஜித்குமார்


2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் 5 ஜாம்பவான்கள் விடைபெறுகின்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14-ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. 

ஒவ்வொரு நாடும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, 
இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்டவை பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதற்கிடையே தற்போது ஜாம்பவான்களாக கோலோச்சி வரும் நட்சத்திர வீரர்கள் 5 பேர் இந்த உலகக் கோப்பையுடன் விடைபெறுகின்றனர்.இதில் 3 பேர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்)
சிக்ஸர் விளாசுவதிலும், அதிரடி பேட்டிங்குக்கும் பெயர் பெற்றவர் மே.இ.தீவுகளின் ஜாம்பவான் கிறிஸ் கெயில். 7 மாதங்கள் கழித்து மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற்றார். 2019 உலகக் கோப்பையே தான் ஆடும் கடைசி ஒருநாள் போட்டியாகும் என அறிவித்தார். 
மீண்டும் அணியில் இடம் பெற்ற கெயில், தனது தேவையை முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து தொடரில் உணர்த்தினார். 2 சதம், 2 அரைசதத்துடன் 424 ரன்களை குவித்தார். உலகக் கோப்பையிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தால், 1979-க்கு பின் முதன்முறையாக மே.இ.தீவுகளுக்கு கோப்பையை பெற்றுத் தந்து விடைபெறுவார் என எதிர்பார்க்கலாம்.

ஷோயிப் மாலிக் (பாகிஸ்தான்)
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முக்கிய இடம் பெற்றவர் ஷோயிப் மாலிக். கடந்த 1999-இல் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். சிறந்த பேட்ஸ்மேன், சுழற்பந்து வீச்சாளர், சிறந்த பீல்டர் என பெயர் பெற்றவர். 282 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 7481 ரன்களை குவித்த ஷோயிப், 156 விக்கெட்டுகளையும் 96 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.


கடந்த ஆண்டு ஜிம்பாப்வே தொடரின் போதே, உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவ்வப்போது பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். அணியில் அனுபவ வீரராக உள்ள ஷோயிப் விடைபெறுவது பாக் அணிக்கு இழப்பாகும்.

ஜேபி டுமினி (தென்னாப்பிரிக்கா)
ஜீன் பால் டுமினி எனப்படும் ஜேபி டுனிமி, தென்னாப்பிரிக்க அணியில் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர். பல மாதங்களாக காயத்தால் அவதிப்பட்ட அவர், தனது சொந்த ஊரான கேப் டவுனில் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆடிய போது, 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கொழும்புவில் இலங்கைக்கு எதிராக அறிமுகமான டுமினி தனது அணியில் முதல் 10 வீரர்கள் பட்டியலில் எப்போதும் இடம் பெறுபவர். தென்னாப்பிரிக்காவுக்காக 194 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ள அவர், 5047 ரன்களை குவித்துள்ளார்.
அவர் இல்லாதது தென்னாப்பிரிக்க அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து டி20 ஆட்டங்களில் பங்கேற்க உள்ளார் டுமினி.

டேல் ஸ்டெய்ன் (தென்னாப்பிரிக்கா)
உலகின் அதிவேக பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார் டேல் ஸ்டெயின். கடந்த 2 ஆண்டுகளாக தோள்வலியால் அவதிப்பட்டு வரும் ஸ்டெயின் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர்.

எனினும் ஒருநாள் ஆட்டங்களில் அவரது செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆனால் வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் முக்கிய தூணாக விளங்குவார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதமே தான் உலகக் கோப்பையோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2005-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான ஸ்டெய்ன் 196 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட்களில் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா)
தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் பிரிவில் முக்கிய இடம் பெற்றுள்ளவர் இம்ரான் தாஹிர். அவர் விக்கெட் வீழ்த்திய பின் கொண்டாடுவதே தனி அழகாக இருக்கும். தாஹிரும், இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளார்.

 
எனினும் தொடர்ந்து டி20 ஆட்டங்களில் ஆடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.  ஒருநாள் ஆட்டங்களில் 24.21 என்ற சராசரியுடன் மொத்தம் 162 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
தென்னாப்பிரிக்காவின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தாஹிர்.
3 ஜாம்பவான்கள் ஓய்வு பெறுவது தென்னாப்பிரிக்க அணிக்கு பெருத்த இழப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT