இந்தியாவுக்குக் கிளம்பும் முன்பு விராட் கோலி பேசியது என்ன?: ரஹானே பதில்
ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் விளையாடுவது, அடுத்தவர் வெற்றியில் மகிழ்வது...
செய்திகள்இந்தியாவுக்குக் கிளம்பும் முன்பு விராட் கோலி பேசியது என்ன?: ரஹானே பதில்
ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் விளையாடுவது, அடுத்தவர் வெற்றியில் மகிழ்வது...
இந்தியாவுக்குக் கிளம்பும் முன்பு இந்திய அணி வீரர்களுக்கு விராட் கோலி அறிவுரைகள் கூறியதாக ரஹானே கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.
2-வது டெஸ்ட் நாளை முதல் மெல்போர்னில் தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.
2-வது டெஸ்டுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இடம்பெற்ற பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்காவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் விராட் கோலி. காயம் காரணமாக ஷமி இடம்பெறவில்லை. சஹாவுக்குப் பதிலாக ரிஷப் பந்த், 2-வது டெஸ்டுக்கான விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஜடேஜா மீண்டும் இடம்பிடித்துள்ளார். பேட்ஸ்மேன் ஷுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிறார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் ரஹானே, கோலி பற்றி கூறியதாவது:
இந்தியாவுக்குக் கிளம்பும் முன்பு எங்கள் அனைவரிடமும் விராட் கோலி பேசினார். அடிலெய்டில் இரவு உணவில் இந்திய வீரர்கள் அனைவரும் பங்கேற்றோம். ஆடுகளத்தில் அந்தத் தருணத்தில் கவனம் செலுத்தி விளையாடுவது, ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் விளையாடுவது, அடுத்தவர் வெற்றியில் மகிழ்வது, ஆடுகளத்தில் மற்றவருக்கு உதவுவது என அணி வீரர்களுக்கு ஆலோசனைகள் கூறி உத்வேகமூட்டினார் கோலி.
முதல் டெஸ்டில் முதல் இரு நாள்கள் எங்களுக்கு நன்றாக அமைந்தன. ஒரு மணி நேரம் மட்டும் மோசமாக விளையாடினோம். அதுதான் அந்த டெஸ்டில் தோல்வியடைய காரணமாகிவிட்டது என்றார்.