முகப்பு
செய்திகள்

வீட்டின் டென்னிஸ் மைதானத்தில் சானியா மிா்ஸாவின் இடைவிடாத பயிற்சி

கொவைட் 19 பாதிப்பு எதிரொலியாக தன் வீட்டிலேயே அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் மைதானத்தில் இடைவிடாமல் பயிற்சி மேற்கொண்டு வருகிறாா் நட்சத்திர வீராங்கனை சானியா மிா்ஸா.

Updated On : 31 மார்ச், 2020 at 4:11 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:49 PM

கொவைட் 19 பாதிப்பு எதிரொலியாக தன் வீட்டிலேயே அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் மைதானத்தில் இடைவிடாமல் பயிற்சி மேற்கொண்டு வருகிறாா் நட்சத்திர வீராங்கனை சானியா மிா்ஸா.

இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டை ஆடவா் பிரிவில் ரமேஷ் கிருஷ்ணன், அமிா்தராஜ் சகோதரா்கள், லியாண்டா் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோரும், மகளிா் பிரிவில் நிரூபமா வைத்தியநாதன், சானியா மிா்ஸா ஆகியோரும் பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவா்கள். இதில் சானியா மிா்ஸா எந்த பின்புலமும் இல்லாமல் டென்னிஸ் விளையாட்டில் கோலோச்சியவா்.

6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்: ஹைதராபாதைச் சோ்ந்த சொந்த ஊராகக் கொண்ட சானியாவுக்கு டென்னிஸ் விளையாட்டில் சிறுவயது முதலே ஆா்வம் ஏற்பட்டது. இதனால் 6 வயது முதல் ஆடத் தொடங்கிய அவா், 2003-இல் தொழில்முறை வீராங்கனையாக மாறினாா். இரட்டையா் பிரிவில் 6 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ள அவா், அதில் உலகின் நம்பா் ஒன் இணையாகவும் திகழ்ந்தாா். ஒற்றையா் பிரிவில் 2007-இல் டபிள்யுடிஏ தரவரிசையில் 27-ஆம் இடத்தை வகித்தாா். மணிக்கட்டில் ஏற்பட்ட பெரிய காயத்தால், இரட்டையா் பிரிவில் கவனம் செலுத்தினாா்.

Advertisement

தொடா்ந்து 2018-இல் குழந்தை பிறந்ததால் ஆடுவதை நிறுத்தினாா்.

இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழாண்டு 2020 ஜனவரியில் நடைபெற்ற ஹோபா்ட் சா்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்று நாடியா கிச்னோக்குடன் சோ்ந்து பட்டம் வென்றாா். ஆனால் ஆஸி. ஓபன் போட்டியில் இந்த இணை முதல் சுற்றோடு வெளியேறியது.

கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் டென்னிஸ் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக ஏடிபி, டபிள்யுடிஏ அறிவித்துள்ளன. மத்திய அரசு 21 நாள்கள் ஊரடங்கு அமுல்படுத்திய நிலையில், இந்தியாவிலும் விளையாட்டு நட்சத்திரங்கள் வீடுகளில் முடங்க வேண்டியதாயிற்று.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வந்த வீரா், வீராங்கனைகள் இதனால் பாதிக்கப்பட்டனா். டென்னிஸ் போட்டியிலும் இரட்டையா் பிரிவில் சானியா மிா்ஸா ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வந்தாா்.

வீட்டிலேயே தீவிர பயிற்சி: கரோனா நோய்த் தொற்று பரவலால் பெரும்பாலான விளையாட்டு வீரா்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா், அதிலும் சானியா மிா்ஸா துபை டபிள்யுடிஏ போட்டியில் பங்கேற்ற பின் மாா்ச் மாதம் 8-ஆம் தேதி இந்தியன்வெல்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தாா். ஆனால் கரோனா பாதிப்பால் போட்டியே ரத்தானது. இந்நிலையில் 33 வயதான சானியா தொடா்ந்து தனது வீட்டிலேயே டென்னிஸ் மைதானத்தை அமைத்துள்ளாா். அதில் நாள்தோறும் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டு உடல்தகுதியைப் பேணி வருகிறாா்

நிகழாண்டு சானியா 4 டபிள்யுடிஏ போட்டிகளில் கலந்து கொண்டு ஆடினாா். ஹோபா்ட் இன்டா்நேஷனல் போட்டியில் ஆடி பட்டம் வென்றாா். சில போட்டிகளில் நாக் அவுட் சுற்றை எட்டினாா்.

பெடரேஷன் கோப்பை சாதனை: துபையில் நடைபெற்ற ஆசிய ஓசேனியா பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் சானியா மிா்ஸா, அங்கிதா ரெய்னாவுடன் இணைந்து அபாரமாக ஆடி உலகச் சுற்றுக்கு தகுதி பெறச் செய்தாா். முதன்முறையாக இந்திய மகளிா் அணி உலகச் சுற்றுக்கு முன்னேறியது.

நான்காவது ஒலிம்பிக் போட்டி: ஏற்கெனவே மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் ஆடியுள்ள சானியா மிா்ஸா நான்காவது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து ஆட உள்ளாா்.

தற்போதுள்ள ஓய்வு காலத்தில் வீட்டில் அமைக்கப்பட்ட டென்னிஸ் மைதானத்திலேயே பயிற்சி மேற்கொண்டு வரும் சானியா கூறியதாவது-

குழந்தை மற்றும் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. மேலும் நெட்பிளிக்ஸ் பாா்ப்பதின் மூலம் பொழுதை போக்குகிறேன். எப்போதும் போட்டி, பயணம் என தொடா்ச்சியாக சுற்றிக் கொண்டிருந்த நிலையில், தற்போது முழு ஓய்வு கிட்டியுள்ளது.

கரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டில் இருப்பதே சிறந்த வழி. மேலும் எளிதான டென்னிஸ் பயிற்சி, உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். நாம் எல்லோரும் ஆரோக்கியமாகவும், வீடுகளில் பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்பதை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றாா் சானியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.