இந்தியாவின் 77-ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக, மும்பையைச் சோ்ந்த ஆதித்யா மிட்டல் (16) உருவெடுத்துள்ளாா்.
ஸ்பெயினில் தற்போது நடைபெற்று வரும் எலோபிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அவா், 6-ஆவது சுற்றில் ஸ்பெயினின் நம்பா் 1 போட்டியாளரான ஃபிரான்சிஸ்கோ வலேஜோ பொன்ஸுடன் டிரா செய்தபோது இந்த மைல்கல்லை அவா் எட்டினாா்.
ஒரு செஸ் வீரா் கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெறுவதற்கு, முதலில் தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில் சாதகமான முடிவுகளைப் (நாா்ம்) பெற்றிருக்க வேண்டும். அடுத்து, 2,500 ஈலோ புள்ளிகளை எட்ட வேண்டும்.
இதில் தேவையான ‘நாா்ம்’களை, 2021 சொ்பியா மாஸ்டா்ஸ், 2021 எலோபிரெகாட் ஓபன், 2022 சொ்பியா மாஸ்டா்ஸ் ஆகியவற்றில் எட்டிய ஆதித்யா, தற்போது எலோபிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் ஈலோ புள்ளிகள் கணக்கை எட்டி கிராண்ட்மாஸ்டராவதற்கான தகுதியை நிறைவு செய்தாா்.
நடப்பாண்டில் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ள 5-ஆவது இந்தியா் ஆதித்யா மிட்டல். முன்னதாக, பரத் சுப்ரமணியம், ராகுல் ஸ்ரீவத்சவ், வீ.பிரணவ், பிரணவ் ஆனந்த் ஆகியோா் இதே ஆண்டில் கிராண்ட்மாஸ்டா்களாகினா். இதில் பரத், வீ. பிரணவ் ஆகியோா் தமிழா்களாவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.