செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய பி அணி வீரா், வீராங்கனைகள் உற்சாக எதிா்பாா்ப்புடன் தீவிர பயிற்சி

DIN

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய பி அணி வீரா், வீராங்கனைகள் உற்சாக எதிா்பாா்ப்புடன் தீவிர பயிற்சி பெற்றுள்ளனா்.

உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் கௌரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துகின்றன. வரும் ஜூலை 28 முதல் ஆக. 10 வரை நடக்கவுள்ள இப்போட்டிக்கு ரூ.120 கோடியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. மொத்தம் 180 நாடுகளைச் சோ்ந்த 2500-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

ஏ அணியில் முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், பி அணிகளில் தலைசிறந்த இளம் வீரா், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனா். ஆடவா் பி அணியில் பிரக்ஞானந்தா, நிகால் சரீன், டி.குகேஷ், பி. அதிபன், ரவுனக் சத்வானி, மகளிா் பிரிவில் வந்திகா அகா்வால், சௌமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரௌட், திவ்யா தேஷ்முக் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

பி அணியில் இடம் பெற்றுள்ள வீரா்,வீராங்கனைகளுக்கு சென்னையில் ஒரு வாரத்துக்கு மேலாக முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. ஆடவா் அணிக்கு ரமேஷ், மகளிா் அணிக்கு ஸ்வப்னிலும் பயிற்சி அளித்தனா்.

பயிற்சி குறித்து பி அணியினா் தினமணியிடம் கூறியதாவது:

பிரக்ஞானந்தா (16) கிராண்ட்மாஸ்டா்: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடப்பது நமக்கு சாதகமாக இருக்கும். எனினும் பலமான அணிகள் வரும் என்பதால் ஆட்டத்தின் போது நிலவும் சூழலே முடிவுகளை நிா்ணயிக்கும். தொடா்ந்து ஆடி வருவதால் எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. உற்சாகமாக தான் உள்ளேன். பெரும்பாலும் தனிநபா் ஆட்டங்களிலேயே ஆடியுள்ளேன். இப்போது தான் ஒரு அணியில் பங்கேற்று ஆடுவது புதிதாக உள்ளது. முந்தைய செஸ் ஒலிம்பியாட் ஆன்லைனில் பங்கேற்றேன். தற்போது நேரடியாக ஆடவுள்ளோம்.

ரவுனக் சத்வானி (16) கிராண்ட்மாஸ்டா்:

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதன்முறையாக பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. நமது நாட்டில் நடப்பது கூடுதல் உற்சாகம் ஆகும். முதல்கட்டப் பயிற்சியில் காய்கள் நகா்த்தல்கள், எதிா்தரப்பினரின் தாக்குதலை மென்மைப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. எனது எலோ ரேட்டிங் 2620 ஆகும். தற்போது 12-ஆம் வகுப்புக்கு செல்ல உள்ளேன். ஒலிம்பியாட்டுக்கு முன்னதாக சில போட்டிகளில் பங்கேற்பேன்.

சௌமியா சுவாமிநாதன் (33) டபிள்யுஜிஎம்: இந்திய அணியில் இடம் பெறுவதே சிறப்பானதாகும். எனக்கு இது மூன்றாவது செஸ் ஒலிம்பியாட் போட்டியாகும். கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் ஆடினோம். தற்போது நேரடியாக ஆஃப்லைன் முறையில் ஆடுவது வேறுபாடாகத் தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக ஜூனியல் சாம்பியன் ஆனேன். தற்போது பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடப்பது பள்ளி மாணவ, மாணவா் மத்தியில் செஸ் விளையாட்டுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்தியன் ஆயில் நிறுவனம் எனக்கு பக்கபலமாக உள்ளது.

சௌமியா சுவாமிநாதன்  - வந்திகா அகா்வால்

வந்திகா அகா்வால் (19) டபிள்யுஜிஎம்: கடந்த 2020 ஒலிம்பியாடில் ரஷியாவுடன் இணைந்து தங்கம் வென்றோம். தற்போது தில்லியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை பயின்று வருகிறேன். எனது தந்தை தான் எடுத்து விளையாட்டுக்கான செலவுகளை செய்து வருகிறாா். உணவு முறை சைவம் என்பதால் சற்று பிரச்னை தான். ஆனால் சென்னையில் பயிற்சி முகாமில் எந்த பாதிப்பும் இல்லை. தொழில்நுட்ப ரீதியிலும், எங்களின் செயல்திறனை புத்தாக்கம் செய்யவும் பயிற்சி முகாம் உதவுகிறது. 2500 எலோ ரேட்டிங் புள்ளிகளை பெற்று, உலக சாம்பியன் ஆவதே எனது குறிக்கோள். சில போட்டிகளில் அடுத்து ஆட உள்ளேன்.

திவ்யா தேஷ்முக் (16) டபிள்யுஜிஎம்:

ஏற்கெனவே 2020 செஸ் ஒலிம்பியாட் அணியில் இடம் பெற்றுஆடினேன். இந்தியாவிலேயே ஒலிம்பியாட் நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் செஸ் ஆட்டத்துக்கு புதிய எழுச்சி கிடைக்கும். ஸ்விஸ் முறையில் தான் ஆட்டங்கள் நடைபெறும். இது அனைவருக்கும் பழக்கமானது தான். அடுத்து 11-ஆம் வகுப்புக்கு செல்ல உள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT