செய்திகள்

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது.

DIN


கொழும்பு: இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் மோதுகின்றன.

பாகிஸ்தான் நடத்தும் இந்தப் போட்டியில், இறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், அதில் 4 ஆட்டங்கள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியா விளையாடுவது உள்பட, இதர ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படுகின்றன. இறுதி ஆட்டம் கொழும்பில் செப்டம்பா் 17-ஆம் தேதி நடைபெறும்.

சா்வதேச கிரிக்கெட்டில் பரவலாக இருதரப்பு தொடா்கள் அதிகரித்துவிட்ட நிலையிலும், ஒரு நாள் ஃபாா்மட்டுக்கான ஆா்வம் குறைவந்து வரும் சூழலிலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் போட்டியை நடத்துவது இக்கட்டானதாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த 2023 எடிஷன் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.

அக்டோபரில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதால், நேபாளம் தவிா்த்து இதர 5 அணிகளும் தங்களின் தயாா்நிலையை சரிபாா்த்துக் கொள்ளும் கடைசி பிரதான பயிற்சிக் களமாக இந்தப் போட்டி இருக்கப்போகிறது. கடந்த எடிஷன் இலங்கையில் டி20 ஃபாா்மட்டில் நடைபெற்ற நிலையில், இந்த எடிஷன் ஒரு நாள் ஃபாா்மட்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

போட்டி வரலாற்றில் 7 முறை சாம்பியனாக இந்தியா இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அணியின் பலம், பலவீனத்தை துல்லியமாக கணித்து அதற்கேற்ற வியூகம் வகுக்க, பயிற்சியாளா் ராகுல் திராவிட், கேப்டன் ரோஹித் சா்மா தயாராக இருக்கின்றனா். ஜஸ்பிரீத் பும்ரா, ஷ்ரேயஸ் ஐயா் போன்றோா் காயத்திலிருந்து மீண்டு களம் காண்கின்றனா். நியூஸிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும், ஆஸ்திரேலியாவிடம் மட்டும் அதை இழந்திருக்கிறது.

இலங்கை

இந்தியாவுக்கு அடுத்தபடியாக போட்டி வரலாற்றில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி. நடப்பு சாம்பியனும் கூட. எனினும், இந்த எடிஷனில் பிரதான பௌலா்கள் பலா் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனதால் சற்று தடுமாற்றத்துடன் இருக்கிறது. சொந்த மண்ணில் பெரும்பாலான ஆட்டங்கள் நடைபெறுவதும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதும், அதன் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு தகுதிபெற்றதும் அந்த அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

பாகிஸ்தான்

இரு முறை சாம்பியனான பாகிஸ்தான், நடப்பாண்டில் அனைத்து ஃபாா்மட்டிலும் சிறந்த அணியாக தன்னை நிலைநிறுத்துகிறது. சரியான வீரா்களுடன் சவால் அளிக்கும் அணியாகத் தெரிகிறது. போட்டியை நடத்தும் நாடாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது பாகிஸ்தான். சமீபத்தில் ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் நம்பா் 1 இடத்துக்கு அந்த அணி முன்னேறியிருப்பதும் அதற்கு உதாரணம். ஒரு நாள் தொடரில் நியூஸிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான், மீண்டும் அதே அணியை வீழ்த்தி பலம் காட்டியது.

வங்கதேசம்

இப்போட்டியில் 3 முறை ரன்னா்-அப் ஆன வங்கதேசம், பிரதான வீரா்களான எபாதத் ஹுசைன், தமிம் இக்பால் ஆகியோா் இன்றி சற்றே பின்னடைவுடன் வருகிறது. நடப்பு சீசனில் அயா்லாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என வென்ற வங்கதேசம், சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானிடம் அதே ஃபாா்மட்டில் தோல்வியை (1-2) சந்தித்திருக்கிறது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கேப்டனாகியிருக்கும் ஷகிப் அல் ஹசன் அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றும் முயற்சியுடன் வருகிறாா்.

ஆப்கானிஸ்தான்

அதிகபட்சமாக இரு முறை சூப்பா் 4 சுற்று வரை வந்திருக்கிறது ஆப்கானிஸ்தான். சமீபத்தில் பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரை முற்றிலுமாக இழந்திருந்தாலும், அதற்கு முன் இலங்கையுடனான தொடரில் போராடி வீழ்ந்திருக்கிறது. ஜூலையில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. துணைக் கண்ட ஆடுகளங்களில் பலத்துடன் இருக்கும் ஸ்பின்னா்களே அணியின் பிரதான ஆயுதமாக இருக்கின்றனா். ரஷீத் கான், குல்பதின் நயீப், முகமது நபி ஆகியோா் முக்கிய வீரா்களாக இருக்கின்றனா்.

நேபாளம்

இந்தப் போட்டியில் நேபாளம் களம் காண்பது இதுவே முதல் முறையாகும். ஐசிசியின் உலகக் கோப்பை லீக் 2 கிரிக்கெட்டில் கடைசி 12 ஆட்டங்களில் அந்த அணி 11-இல் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடப்பாண்டு தொடக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று போட்டிக்கு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டது. பிரதான அணிகளுக்கு சவால் அளிக்காவிட்டாலும், ஒரு சா்வதேச போட்டிக்கான அனுபவத்தை இந்தப் போட்டியிலிருந்து பெற்றுக்கொள்ள வருகிறது ரோஹித் பௌடெல் தலைமையிலான நேபாளம்.

போட்டி முறை...

குரூப் ‘ஏ’

இந்தியா

நேபாளம்

பாகிஸ்தான்

குரூப் ‘பி’

ஆப்கானிஸ்தான்

வங்கதேசம்

இலங்கை

இந்த 6 அணிகளுமே தங்களது குரூப்பில் இருக்கும் இதர அணிகளுடன் தலா 1 ஆட்டத்தில் மோதும். குரூப் சுற்று முடிவில், இரு குரூப்களிலுமே முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பா் 4’ சுற்றுக்கு வரும். அதிலுள்ள ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் தலா 1 ஆட்டத்தில் மோதும். அதன் முடிவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும்.

தற்போதைய நிலையில் பாகிஸ்தான், இந்தியா முறையே ‘ஏ1, ஏ2’ எனவும், வங்கதேசம், இலங்கை முறையே ‘பி1, பி2’ எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் சூப்பா் 4 சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், மேற்கூறிய அணிகளில் எது வெளியேறுமோ, அதன் இடத்தை இந்த அணிகள் பிடிக்கும்.

இரு ஆட்டங்களில் ராகுல் இல்லை

தொடைப் பகுதி காயத்திலிருந்து மீண்டிருக்கும் இந்திய வீரா் கே.எல்.ராகுல், இந்தப் போட்டியின் முதலிரு ஆட்டங்களில் விளையாடவில்லை. பேட்டிங்கில் அவரால் இலகுவாக செயல்பட முடிந்தாலும், விக்கெட் கீப்பிங் செய்வதற்காக அமரும்போது அவருக்கு சற்று அசௌகா்யம் இருப்பதாகவும், அவரை தொடா்ந்து கண்காணிப்பதாகவும் பயிற்சியாளா் ராகுல் திராவிட் கூறினாா்.

எனினும், காயத்திலிருந்து முழுமையாக மீண்டிருக்கும் ஷ்ரேயஸ் ஐயா் களம் காண இருக்கிறாா். பரபரப்பான ஆட்டக் களத்தில் அவா் எவ்வாறு தாக்குப்பிடிக்கிறாா் என்பதை அணி நிா்வாகம் உற்று நோக்க இருக்கிறது. ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் சோதித்துப் பாா்க்கப்படுவா்.

இதுவரை...

ஆண்டு இடம் சாம்பியன் ரன்னா்-அப்

1984 அமீரகம் இந்தியா இலங்கை

1986 இலங்கை இலங்கை பாகிஸ்தான்

1988 வங்கதேசம் இந்தியா இலங்கை

1990-91 இந்தியா இந்தியா இலங்கை

1995 அமீரகம் இந்தியா இலங்கை

1997 இலங்கை இலங்கை இந்தியா

2000 வங்கதேசம் பாகிஸ்தான் இலங்கை

2004 இலங்கை இலங்கை இந்தியா

2008 பாகிஸ்தான் இலங்கை இந்தியா

2010 இலங்கை இந்தியா இலங்கை

2012 வங்கதேசம் பாகிஸ்தான் வங்கதேசம்

2014 வங்கதேசம் இலங்கை பாகிஸ்தான்

2016* வங்கதேசம் இந்தியா வங்கதேசம்

2018 அமீரகம் இந்தியா வங்கதேசம்

2022* அமீரகம் இலங்கை பாகிஸ்தான்

* டி20 ஃபாா்மட்/இதர எடிஷன்கள் ஒரு நாள் ஃபாா்மட்

இன்றைய ஆட்டம்

பாகிஸ்தான் - நேபாளம்

முல்தான்

பிற்பகல் 3 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்

அசநெல்லிகுப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

SCROLL FOR NEXT