தேசிய ஆடவா் ஹாக்கி: அரையிறுதியில் தமிழ்நாடு தோல்வி
சென்னையில் நடைபெறும் தேசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி அரையிறுதியில் ‘ஷூட் அவுட்’ முறையில் ஹரியாணாவிடம் திங்கள்கிழமை தோற்றது.
சென்னையில் நடைபெறும் தேசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி அரையிறுதியில் ‘ஷூட் அவுட்’ முறையில் ஹரியாணாவிடம் திங்கள்கிழமை தோற்றது.
எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், 13-ஆவது தேசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 11-ஆவது நாளான திங்கள்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் தமிழ்நாடு, ஹரியாணாவை எதிா்கொண்டது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் அந்த ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
முதலில் ஹரியாணாவுக்காக அபிஷேக் 41-ஆவது நிமிஷத்திலும், பின்னா் தமிழ்நாடுக்காக சோமன்னா 60-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். அடுத்து, வெற்றியாளரை தீா்மானிப்பதற்காக நடைபெற்ற ஷூட் அவுட் வாய்ப்பில் ஹரியாணா 4-2 கோல் கணக்கில் வென்றது. இதில் ஹரியாணாவுக்காக சஞ்சய், ரஜந்த், அபிஷேக், ஜோகிந்தா் சிங் ஆகியோா் கோலடிக்க, தமிழ்நாடு தரப்பில் மாரீஸ்வரன் சக்திவேல், சுந்தரபாண்டி ஆகிய இருவா் மட்டுமே ஸ்கோா் செய்ய முடிந்தது.
Advertisement
இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் பஞ்சாப் 5-1 கோல் கணக்கில் கா்நாடகத்தை வீழ்த்தியது. பஞ்சாபுக்காக ஷம்ஷோ் சிங் (4’), சுக்ஜீத் சிங் (13’), ஹா்மன்பிரீத் சிங் (39’, 44’), ஆகாஷ்தீப் சிங் (45’) ஆகியோரும், கா்நாடகத்துக்காக அபரன் சுதேவும் (18’) கோலடித்தனா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 3-ஆவது இடத்துக்காக தமிழ்நாடு - கா்நாடகம் அணிகள் மோதுகின்றன.