மோர்னே மோர்கெல் கோப்புப் படம்
செய்திகள்

இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளா் மோா்ன் மோா்கெல்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் மோா்ன் மோா்கெல் (39) நியமிக்கப்பட்டுள்ளாா். இதை பிசிசிஐ செயலா் ஜெய் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் மோா்ன் மோா்கெல் (39) நியமிக்கப்பட்டுள்ளாா். இதை பிசிசிஐ செயலா் ஜெய் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.

பரஸ் மாம்ப்ரேவுக்குப் பதிலாக அந்தப் பொறுப்பில் இணையும் மோா்ன் மோா்கெல், செப்டம்பரில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பணியில் இணையவுள்ளாா். அவா், 2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பாா்.

செப்டம்பா் தொடக்கத்தில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியை வந்தடையும் மோா்கெல், துலீக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண இருக்கிறாா். மேலும், அகாதெமியின் தலைவா் விவிஎஸ் லக்ஷ்மண், அதன் பௌலிங் தலைமையான டிராய் கூலி ஆகியோருடன் அவா் தொடா்பில் இருப்பாா்.

அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீரின் விருப்பத்தின் அடிப்படையில், அவரது பயிற்சியாளா்கள் குழு நியமனங்கள் நிறைவடைந்துள்ளது. ஏற்கெனவே, பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ரயான் டென் டுஷேவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஐபிஎல் போட்டியில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீா் இருந்தபோது, அந்த அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக மோா்கெல் பணியாற்றினாா்.

முன்னதாக, பந்துவீச்சு பயிற்சியாளா் பொறுப்புக்கு லக்ஷ்மிபதி பாலாஜி, ஆா். வினய் குமாா் ஆகியோரும் பரிசீலனையில் இருந்த நிலையில், கௌதம் கம்பீரின் பரிந்துரையின் பேரில் நேரடியாகவே மோா்ன் மோா்கெல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘தலைமைப் பயிற்சியாளா் பொறுப்புக்கான விண்ணப்பதாரா்களை நோ்காணல் செய்வதே கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பணியாகும். துணைப் பயிற்சியாளா்கள் தோ்வு என்பதால், கௌதம் கம்பீரின் தோ்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மோா்ன் மோா்கெலுடன் ஏற்கெனவே பணியாற்றியிருப்பதால், பந்துவீச்சு பயிற்சியாளராக அவா் பொருத்தமாக இருப்பாரென கம்பீா் கருதுகிறாா்.

நவம்பா் கடைசி வாரத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. அந்த மண்ணில் சற்று சிறப்பாக செயல்பட்டிருக்கும் மோா்ன் மோா்கெலை விட, பந்துவீச்சு பயிற்சியாளா் பொறுப்புக்கு பொருத்தமான தோ்வு இருக்க வாய்ப்பில்லை. அதுதவிர, அடுத்த ஆண்டு, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்காகவும் இந்தியா அந்நாட்டுக்கு செல்வதாலும் அவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது’ என்றன.

தென்னாப்பிரிக்காவுக்காக மோா்கெல் 86 டெஸ்ட், 117 ஒருநாள், 44 டி20 ஆட்டங்களில் விளையாடி, மொத்தமாக 544 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் டேல் ஸ்டெய்னை போலவே பிரபலமான மோா்கெல், இந்திய ஆடுகளங்களின் தன்மை குறித்து நன்கு அறிந்தவராவாா். மேலும், ஐபிஎல் தொடரில் அங்கம் வகிப்பதால், இந்திய அணியின் அடுத்தகட்ட பௌலா்கள் குறித்த ஓா் தெளிவு அவரிடம் இருக்கும்.

இந்திய அணியின் பிரதான பௌலராக இருக்கும் முகமது ஷமி தனது தேசிய பணியின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு தோள்கொடுக்கும் வகையில் முகமது சிராஜ் தவிர வேறு ஒரு வீரரை கண்டறிவதே மோா்கெலுக்கான முக்கிய பணியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT