உலக ரேபிட், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த மாக்னஸ் கார்ல்சென் மீண்டும் போட்டிக்குத் திரும்பியுள்ளார்.
உலகின் தலைசிறந்த செஸ் சாம்பியனாக விளங்கி வருபவர் மாக்னஸ் கார்ல்சென். இதுவரை கிளாசிங் செஸ் பிரிவில் 5 முறை உலக சாம்பியன் பட்டமும் ரேபிட், பிளிட்ஸ் போட்டியில் 7 முறை உலக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.
இவர் தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வரும் உலக ரேபிட், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், மாக்னஸ் கார்ல்சென் ஜீன்ஸ் அணிந்து வந்ததால் தற்போது நடைபெற்று வரும் போட்டியின் 9 வது சுற்றுடன் அவரை நீக்கி சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே உத்தரவிட்டது.
ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கார்ல்செனுக்கு முதல்முறையாக 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17,076) அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆடையை மாற்றிவிட்டு வந்து விளையாடும்படி நிர்வாகம் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த கார்ல்சென் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து உலக செஸ் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவரும், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், “ மேக்னஸ் கார்ல்சன் விதிகளைப் பின்பற்ற மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் அவர் எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. இது உணர்ச்சிகரமாக எடுக்கப்பட்ட முடிவாகத் தெரிகிறது. மாக்னஸ் சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், கார்ல்சென் மீண்டும் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் விளையாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனியார் யூடியுப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் நியூயார்க்கில் இன்னும் ஒரு நாளாவது விளையாடுவேன். நான் நன்றாக இருந்தால், இன்னும் ஒரு நாள் கூட விளையாடுவேன்.
நான் விஸ்வநாதன் ஆனந்திடம் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை. அதே பதில்களை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் சுயமாகச் சிந்திக்க முடியாத இயந்திரங்களைப் போன்று இருக்கின்றனர், நான் எந்த விதியை மீறினேன் என்று தெரியவில்லை. எனக்கு அதுகுறித்து தெளிவான பதிலும் கிடைக்கவில்லை.
ஜீன்ஸ் பொதுவாக அனுமதிக்கப்படாது என்று அவர்கள் கூறினார்கள். பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை என்றால் அதற்கு சில விதிவிலக்குகள் இருக்குமல்லவா. அதைத் தவிர்த்து வேறு உடையில் நான் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லையென்றால் அப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஃபிடே தலைவர் டுவோர்கோவிச் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய கார்ல்சென், “டுவோர்கோவிச் மற்றும் முக்கிய ஸ்பான்சர் டர்லோவ் ஆகியோரிடம் பேசுகையில், நாங்கள் இந்த விவகாரத்தில் சில பயனுள்ள விவாதங்களை நடத்தலாம் என்று உணர்ந்தேன். எனவே, நாளின் முடிவில் நான் விளையாட முடிவெடுத்தேன்” என்றார்.
எனக்கு ப்ளிட்ஸ் செஸ் விளையாட மிகவும் பிடிக்கும். என்னுடைய ரசிகர்களுக்கு நான் விளையாடுவதைக் காணும் வாய்ப்பை நான் கொடுக்க விரும்புகிறேன்.இதுவே கடைசி முறையாகக் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும். ஆனால், எனது கொள்கையின் படி நான் நாளை கண்டிப்பாக ஜீன்ஸ் அணிந்து விளையடுவேன்,” என்று கார்ல்சன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.