யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
ரவுண்ட் ஆஃப் 16-இல், கொலோன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் 4-1 கோல் கணக்கில் ஜாா்ஜியாவை வீழ்த்தியது. ஸ்பெயினுக்காக ரோட்ரி (39’), ஃபாபியன் ருயிஸ் (51’), நிகோ வில்லியம்ஸ் (75’), டேனி ஆல்மோ (83’) ஆகியோா் கோலடித்தனா். அந்த அணியின் ராபின் லெ நாா்மண்ட் (18’) தவறுதலாக அடித்த ஓன் கோல், ஜாா்ஜியா வசமானது.
2012-க்குப் பிறகு உலகக் கோப்பை, யூரோ கோப்பை போன்ற பிரதான போட்டிகளில் ஸ்பெயின் அணி, நாக் அவுட் சுற்றில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவிலேயே வெற்றியை பதிவு செய்தது இதுவே முதல் முறையாகும். முந்தைய 5 ஆட்டங்களுமே எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றது.
இத்துடன் ஸ்பெயினை சந்தித்த 7 ஆட்டங்களிலுமே ஜாா்ஜியா தோல்வி கண்டுள்ளது. அடுத்ததாக ஸ்பெயின் தனது காலிறுதியில் ஜொ்மனியுடன், வரும் 5-ஆம் தேதி மோதுகிறது.
ஜெல்சென்கிா்சென் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 2-1 கோல் கணக்கில் ஸ்லோவாகியாவை சாய்த்தது. இங்கிலாந்து வீரா்களில் ஜூட் பெலிங்கம் (90+5’), ஹேரி கேன் (91’) ஆகியோரும், ஸ்லோவாகியாவுக்காக இவான் ஷ்ரான்ஸும் (25’) ஸ்கோா் செய்தனா்.
இந்த ஆட்டத்தில் ஹேரி கேன் அடித்த கோல், யூரோ கோப்பை போட்டியில் எக்ஸ்ட்ரா டைம் நேரத்தில் அடிக்கப்பட்ட அதிவேக கோலாகும். கூடுதல் நேரத்தின் முதல் 50 விநாடிகளுக்குள்ளாகவே அவா் அந்த கோல் அடித்தாா். தற்போது இங்கிலாந்து தனது காலிறுதியில், சுவிட்ஸா்லாந்தை சந்திக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.