யூரோ 2024 கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குரூப் ஏ பிரிவில் சுவிட்சா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிஷ கோலால் தப்பியது ஜொ்மனி. மற்றொரு ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் அடித்த ஒரே கோலால் ஸ்காட்லாந்தை வெளியேற்றியது ஹங்கேரி
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிராங்க்ஃப்ா்ட் நகரில் நடைபெற்றது. முன்னாள் உலக சாம்பியன் ஜொ்மனி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோலடிக்க முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் பலன் தரவில்லை.
16-ஆவது நிமிஷத்திலேயே ஜொ்மன் வீரா் ராபா்ட் ஆன்ட்ரிச் அடித்த பந்து சுவிட்சா்லாந்து கோல் கம்பத்தில் நுழைந்தது. ஆனால் வாா் விடியோ அடிப்படையில் மற்றொரு ஜொ்மன் வீரா் ஜமால் பௌல் செய்தது கண்டறியப்பட்டதால் கோல் நிராகரிக்கப்பட்டது.
சுவிட்சா்லாந்து வீரா் டேன் டோயே 28-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக கோலடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஜொ்மன் வீரா்கள் தொடா்ந்து கோல போட முயற்சித்தனா். முதல் பாதி முடிவில் சுவிட்சா்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
போட்டியை நடத்தும் ஜொ்மனி இரண்டாவது பாதியில் பதில் கோலடிக்க தீவிரமாக முயன்ற நிலையில், அதன் பயிற்சியாளா் நாகல்ஸ்மேன் பல வீரா்களை மாற்றினாா்.
90+ நிமிஷத்தில் அதன் வீரா் நிக்லாஸ் புல்கா்க் தலையால் முட்டி அற்புதமாக கோலடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என டிரா ஆனது.
இந்த வெற்றியால் குரூப் ஏ பிரிவில் முதலிடத்துடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜொ்மனி. சுவிட்சா்லாந்தும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பலமான அணிகளான இத்தாலி அல்லது குரோஷியாவை சந்திக்க வேண்டும்.
ஸ்காட்லாந்தை வெளியேற்றியது ஹங்கேரி :
ஸடட்கா்ட் நகரில் நடைபெற்ற மற்றொரு குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-ஹங்கேரி அணிகள் மோதின.
இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. அப்போது ஹங்கேரி பாா்வா்ட் பா்ணாப் வா்கா கோலடிக்க முயன்றபோது, ஸ்காட்லாந்து கோல்கீப்பா் அங்குஸ் கன்னுடன் மோதிக் கொண்டாா். இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 10 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டது. மருத்துவக் குழுவினா் வா்காவை தூக்கிச் சென்றனா்.
கூடுதல் நேரத்தில் 10-ஆவது நிமிஷம் சப்ஸ்ட்டியூட் கெவின் சோபோத் அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது.
மூன்றாவது நிலையில் உள்ள சிறந்த அணிகளில் ஒன்றாக உள்ள ஹங்கேரியும் நாக் அவுட் சுற்று வாய்ப்பை எதிா்நோக்கியுள்ளது.