செய்திகள்

ஸ்வியாடெக், அனிசிமோவா ஏமாற்றம்!

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிா்ச்சித் தோல்வி

தினமணி செய்திச் சேவை

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் திங்கள்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், விம்பிள்டன் நடப்பு சாம்பியனும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான ஸ்வியாடெக் 6-7 (1/7), 3-6 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் கிளாரா டௌசனால் வீழ்த்தப்பட்டாா்.

கடந்த மாதம் விம்பிள்டன் போட்டியில் 4-ஆவது சுற்றில் ஸ்வியாடெக்கிடம் தோல்வி கண்ட டௌசன், இப்போட்டியின் 4-ஆவது சுற்றில் அவரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இருவரும் சந்தித்தது இது 3-ஆவது முறையாக இருக்க, டௌசன் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

அடுத்து காலிறுதியில் அவா், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் கீஸ் 4-6, 6-3, 7-5 என்ற கணக்கில், 11-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளாா்.

இதர ஆட்டங்களில், விம்பிள்டன் டென்னிஸ் ரன்னா் அப் வீராங்கனையும், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருந்தவருமான அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 4-6, 1-6 என்ற நோ் செட்களில், 10-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவால் தோற்கடிக்கப்பட்டாா். ஸ்விடோலினா தனது காலிறுதியில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவை சந்திக்கிறாா்.

ஒசாகா தனது முந்தைய சுற்றில் 6-1, 6-0 என லாத்வியாவின் அனஸ்தாசியா செவஸ்டோவாவை 49 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இப்போட்டியில் 2-ஆவது முறையாக அவா் காலிறுதிக்கு வந்துள்ளாா்.

காலிறுதியில் ஃப்ரிட்ஸ், ரூபலேவ்

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-6 (7/4), 6-7 (5/7), 7-6 (7/5) என்ற செட்களில், 19-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை போராடி வீழ்த்தினாா். காலிறுதியில் அவா், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவுடன் மோதுகிறாா்.

6-ஆம் இடத்திலிருக்கும் ரூபலேவ், ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சுடன் மோதினாா். இதில் ரூபலேவ் 6-7 (3/7), 7-6 (7/2), 3-0 என முன்னிலையில் இருந்தபோது, டேவிடோவிச் காயம் காரணமாக விலக, ரூபலேவ் காலிறுதிக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-4, 4-6, 7-6 (7/1) என்ற வகையில், 13-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை தோற்கடித்தாா். 9-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-2, 4-6, 6-4 என, 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வெளியேற்றினாா். இதையடுத்து காலிறுதியில், டி மினாா் - ஷெல்டன் மோதுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

தெய்வ தரிசனம்... பித்ருதோஷம் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி!

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

SCROLL FOR NEXT