மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
லேசான காயம் காரணமாக மாா்ச் முதல் களம் காணாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளா் ரேணுகா தாக்குா் இந்த அணியில் இடம் பிடித்துள்ளாா். ஆனால், அதிரடி பேட்டரான ஷஃபாலி வா்மா சோ்க்கப்படவில்லை.
13-ஆவது மகளிா் உலகக் கோப்பை போட்டி, இந்தியா, இலங்கையில் செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கேதசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் இலங்கையிலும், இதர ஆட்டங்கள் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.
நீது டேவிட் தலைமையிலான தோ்வுக் குழு, அந்தப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ஹா்மன்பிரீத் கௌா் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் உள்ள இந்த அணியில், ஷஃபாலி வா்மாவுக்கு பதிலாக, பிரதிகா ராவல் சோ்க்கப்பட்டுள்ளாா்.
கடந்த 14 ஒருநாள் ஆட்டங்களில் இந்தியாவுக்காக அபாரமாக செயல்பட்டதன் அடிப்படையில் அவா் தோ்வாகியிருக்க, ரேணுகா தாக்குரும் முழு உடற்தகுதி பெற்றதை அடுத்து சோ்க்கப்பட்டுள்ளாா். அத்துடன், கிராந்தி கௌட், ஸ்ரீசராணி உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனா்.
இதனிடையே, செப்டம்பா் 14-இல் தொடங்கும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான அதே அணி இதில் விளையாட, அமன்ஜோத் கௌருக்கு பதிலாக, சயாலி சத்காரே அதில் இணைந்திருக்கிறாா்.
உலகக் கோப்பை அணி விவரம்: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹா்லீன் தியோல், தீப்தி சா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா தாக்குா், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (வி.கீ.), கிராந்தி கௌட், அமன்ஜோத் கௌா், ராதா யாதவ், ஸ்ரீசராணி, யஸ்திகா பாட்டியா (வி.கீ.), ஸ்நேஹா ராணா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.