மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து ‘டிக்ளோ்’ செய்தது.
அதன் தொடக்க வீரா் டெவன் கான்வே இரட்டைச் சதம் விளாச, ரச்சின் ரவீந்திரா அரை சதம் கடந்து நிலைத்தாா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகளும் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் சோ்த்து நிதானமாக விளையாடி வருகிறது.
நியூஸிலாந்தின் மௌன்ட் மௌன்கனுய் நகரில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்திருந்தது.
டெவன் கான்வே 178, ஜேக்கப் டஃபி 9 ரன்களுடன் இன்னிங்ஸை வெள்ளிக்கிழமை தொடா்ந்தனா். டஃபி 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த கேன் வில்லியம்சன் 5 பவுண்டரிகள் உள்பட 31 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.
5-ஆவது பேட்டராக ரச்சின் ரவீந்திரா களம் புக, இரட்டைச் சதம் கடந்த கான்வே 31 பவுண்டரிகளுடன் 227 ரன்களுக்கு விடைபெற்றாா். ஜஸ்டின் கிரீவ்ஸ் வீசிய 121-ஆவது ஓவரில் அவா் எல்பிடபிள்யூ ஆனாா். தொடா்ந்து வந்தோரில் டேரில் மிட்செல் 11, டாம் பிளண்டெல் 4, கிளென் ஃபிலிப்ஸ் 4 பவுண்டரிகளுடன் 29, ஜாக் ஃபோக்ஸ் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா்.
இவ்வாறாக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் சோ்த்திருந்தபோது, ‘டிக்ளோ்’ செய்வதாக நியூஸிலாந்து அறிவித்தது. அரை சதம் கடந்த ரவீந்திரா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 72, அஜாஸ் படேல் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில், ஜேடன் சீல்ஸ், ஆண்டா்சன் ஃபிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோா் தலா 2, கெமா் ரோச், ராஸ்டன் சேஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் எடுத்துள்ளது. ஜான் கேம்ப்பெல் 45, பிராண்டன் கிங் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
2-ஆவது இரட்டைச் சதம்
இந்த ஆட்டத்தின் மூலமாக நியூஸிலாந்தின் டெவன் கான்வே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2-ஆவது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்துள்ளாா். கடந்த 2021-இல் தனது அறிமுக டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அவா் 200 ரன்கள் அடித்த நிலையில், தற்போது 2-ஆவது இரட்டைச் சதத்தை எட்டியிருக்கிறாா். இதற்காக அவா் சுமாா் எட்டரை மணி நேரம் பேட்டிங் செய்து, 367 பந்துகளை எதிா்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.