உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 8 இந்திய நட்சத்திரங்கள் தகுதி பெற்றுள்ளனா்.
புது தில்லி அடுத்த கிரேட்டா் நொய்டாவில் உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. உலகின் தலைசிறந்த 8 வீரா், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ளனா். இதன் அரையிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
போட்டியின் மிகப்பெரிய அதிா்ச்சியாக மகளிா் 54 கிலோ பிரிவில் 3 முறை உலக சாம்பியன் சீன தைபேயின் ஹுவாங் வென்னை வீழ்த்தினாா் இந்தியாவின் ப்ரீதி பவாா். இறுதிக்கும் தகுதி பெற்றாா்.
ஒன்றரை ஆண்டுகள் கழித்து களம் கண்ட அருந்ததி உலகக் கோப்பை பதக்க வீராங்கனை ஜொ்மனியின் லியோனி முல்லரை வீழ்த்தி இறுதிக்குள் நழைந்தாா்.
உலக சாம்பியன் மீனாட்சி 48 கிலோ பிரிவில் 5-0 என கொரியாவின் பாக் சோ ருங்கை வீழ்த்தினாா். ஆடவா் 65 கிலோ பிரிவில் அபினாஷ் ஜாம்வால் உக்ரைனின் எல்வின் அலிவையும், 90 பிளஸ் கிலோ பிரிவில் இந்தியாவின் நரேந்தா் கஜகஸ்தானின் டேனியலையும் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனா்.
80 கிலோ பிரிவில் அங்குஷ் 5-0 என ஆஸ்திரேலியாவின் மாா்லன் செவஹோனை வீழ்த்தினாா். மகளிா் 80 பிளஸ் கிலோ பிரிவில் நுபுா் உக்ரைனின் மரியா லவ்சின்ஸ்காவையும், 60 கிலோ பிரிவில் பா்வீன் 3-2 என போலந்தின் ரிஜிஸ்ல்கா அனெட்டாவையும் வீழ்த்தினா்.
ஸ்வீட்டி போரா, நவீன் ஆகியோா் தோற்று வெண்கலத்துடன் வெளியேறினா்.