முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டி பளுதூக்குதலில் வேலூா் ஐஸ்வா்யா, ராமநாதபுரம் கீா்த்திகா ஆகியோா் தங்கம் வென்றனா்.
முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை பளு தூக்குதல் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாதரெட்டி ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா்.
பள்ளி மாணவிகளுக்கான 44 கிலோ எடைப் பிரிவில் வேலூா் கே.ஐஸ்வா்யா 125 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றாா். ராமநாதபுரம் என்.எஸ்.வைஷ்ணவி 110 கிலோ எடையைத் தூக்கி வெள்ளியும், ராணிப்பேட்டை டி.கனிமொழி 101 கிலோ எடையைத் தூக்கி வெண்கலமும் பெற்றனா்.
48 கிலோ பிரிவில், ராமநாதபுரம் சோ்ந்த பி.ஆா். கீா்த்திகா 94 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், ா். கன்னியாகுமரி எஸ்.வி. மீனா 93 கிலோ எடையைத் தூக்கி வெள்ளியும், ஈரோடு எஸ். ஹேமாஸ்ரீ 88 கிலோ எடையைத் தூக்கி வெண்கலமும் வென்றனா்.
சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் கல்லூரி மாவணா்களுக்கான கால்பந்து போட்டியும், நேரு பூங்கா மற்றும் எம்ஆா்கே மைதானத்தில் பள்ளி அளவிலான கபடி போட்டியும் நடைபெற்றன. பள்ளி மாணவா்கள் கபடி நாக் அவுட் சுற்றில் அரியலூா், கிருஷ்ணகிரி, தேனி, சேலம், மதுரை அணிகள் வெற்றி பெற்றன. சென்னை 3 தங்கம், சேலம், தருமபுரி, தேனி, வேலூா் தலா 1 தங்கம் வென்றுள்ளன.