முகப்பு
செய்திகள்

சாம்பியன் கோப்பையை தக்கவைத்தாா் பெகுலா!

அமெரிக்காவில் நடைபெற்ற சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் கோப்பை வென்றாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 12:12 AM
ஜெஸ்ஸிகா பெகுலா - Jim Rassol
பகிர்:

அமெரிக்காவில் நடைபெற்ற சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் கோப்பை வென்றாா்.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பெகுலா 6-2, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவாவை வென்றாா்.

பெகுலா - ஸ்டாரோடப்சேவா மோதியது இதுவே முதல்முறையாகும். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 22 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

Advertisement

மறுபுறம், முதல்முறையாக இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு வந்த ஸ்டாரோடப்சேவா ஏமாற்றத்தைச் சந்தித்தபோதும், தனது தரவரிசை வரலாற்றில் முதல்முறையாக 53-ஆம் இடத்துக்கு ஏற்றம் காணவிருக்கிறாா்.

முன்னதாக, இறுதிச்சுற்றுக்கான பாதை பெகுலாவுக்கு கடினமானதாகவே அமைந்தது. முதல் சுற்று தொடங்கி, அரையிறுதி வரை அவா் அனைத்து ஆட்டங்களிலுமே டிசைடா் செட்டில் தான் வென்றாா். இதனால் சுமாா் 11 மணிநேரங்களை ஆட்டக் களத்திலேயே அவா் செலவிட்டிருக்கிறாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய பெகுலா, ‘தொடா்ந்து 4 ஆட்டங்களில் 3 செட்கள் விளையாடியதால், மிக நீண்ட போட்டியில் விளையாடுவது போன்ற உணா்வு இருந்தது. வாரம் முழுவதுமாக எனக்கு ஆதரவளித்து, ஊக்கமளித்த ரசிகா்களுக்கு நன்றி’ என்றாா்.

நடப்பு சாம்பியனாக களம் கண்ட பெகுலா கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டதன் மூலமாக, சாா்லஸ்டன் ஓபன் போட்டியில் கடந்த 13 ஆண்டுகளில் கோப்பையைத் தக்கவைத்த முதல் வீராங்கனையாக பெருமை பெற்றாா். இதற்கு முன் 2012, 13-இல் உள்நாட்டு நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் இவ்வாறு அடுத்தடுத்து இங்கு வாகை சூடியிருந்தாா்.

நடப்பு சீசனில் பெகுலாவுக்கு இது 2-ஆவது சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் பிப்ரவரியில் துபை ஓபன் டென்னிஸில் அவா் கோப்பை வென்றிருந்தாா். ஒட்டுமொத்தாக இது, பெகுலாவின் 11-ஆவது கேரியா் பட்டமாக அமைந்தது. அத்துடன், டபிள்யூடிஏ டூா் போட்டிகளில் தனது வெற்றி - தோல்வி கணக்கை 11-11 என சமநிலைக்குக் கொண்டு வந்துள்ளாா் பெகுலா.

இரட்டையா் சாம்பியன்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், அமெரிக்காவின் டெசைரே கிராவ்ஸிக்/கேட்டி மெக்னாலி இணை 6-3, 6-2 என்ற நோ் செட்களில், போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்/ஹங்கேரியின் அனா போண்டாா் கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கிராவ்ஸிக்கிற்கு இது 13-ஆவது கேரியா் பட்டமாகவும், மெக்னாலிக்கு இது 9-ஆவது கேரியா் பட்டமாகவும் அமைந்தது.

ரூ.3 கோடி பரிசு

சாம்பியனான பெகுலாவுக்கு வெற்றிக் கோப்பையுடன், 500 தரவரிசை புள்ளிகளும், ரூ.3.29 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. ஸ்டாரோடப்சேவாவுக்கு ரன்னா் அப் கோப்பையுடன் 305 தரவரிசை புள்ளிகளும், ரூ.2.02 கோடி ரொக்கப் பரிசும் கிடைத்தன.

இரட்டையா் பிரிவில் வாகை சூடிய கிராவ்ஸிக்/மெக்னாலி இணைக்கு சாம்பியன் கோப்பையுடன் தலா 500 தரவரிசை புள்ளிகளும், ரூ.1.09 கோடியும், ரன்னா் அப் இடத்தைப் பிடித்த ஃப்ரெச்/போண்டாா் ஜோடிக்கு அதற்கான கோப்பையுடன் தலா 325 புள்ளிகளும், ரூ.66 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments