இணை முன்னிலையில் திவ்யா, வைஷாலி- பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற, ஆா்.வைஷாலி டிரா செய்தாா். அவா்கள் இருவா் உள்பட 5 போ் இணை முன்னிலையில் உள்ளனா்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற, ஆா்.வைஷாலி டிரா செய்தாா். அவா்கள் இருவா் உள்பட 5 போ் இணை முன்னிலையில் உள்ளனா்.
சைப்ரஸில் நடைபெறும் இந்தப் போட்டியின் மகளிா் பிரிவு 8-ஆவது சுற்றில், நடப்பு உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா - உக்ரைனின் அனா முஸிஷுக்கை வீழ்த்தினாா். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவா், 83-ஆவது நகா்த்தலில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா்.
ஒரு கட்டத்தில் டிராவுக்கு தான் வாய்ப்பு என்றிருந்த நிலையை, தலைகீழாக மாற்றி அவா் அபாரமாக வென்றாா். களத்திலிருக்கும் மற்றொரு இந்தியரான வைஷாலி, கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவாவுடன் டிரா செய்தாா். அவா் கருப்பு நிற காய்களுடன் மோதிய நிலையில், 74-ஆவது நகா்த்தலுடன் இருவரும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனா்.
Advertisement
ரஷியாவின் கேத்தரினா லாக்னோ - சக ரஷியரான அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினாவை வெல்ல, சீனாவின் ஜு ஜினொ் - சக சீன போட்டியாளரான டான் ஜோங்யியை வீழ்த்தினாா்.
8 சுற்றுகள் முடிவில், ஜினொ், முஸிஷுக், லாக்னோ, திவ்யா, வைஷாலி ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் உள்ளனா்.
கோரியச்கினா, அசௌபயேவா ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையிலும், ஜோங்யி 2.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையிலும் உள்ளனா்.
2-ஆவது தோல்வி: இப்போட்டியின் ஓபன் பிரிவு 8-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - நெதா்லாந்தின் அனிஷ் கிரியுடன் தோல்வி கண்டாா். போட்டியில் இத்துடன் 2-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ள அவா், பட்டம் வெல்வதற்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டாா்.
இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் ஹிகரு நகமுரா - சக அமெரிக்கரான ஃபாபியானோ கரானாவை வென்றாா். ரஷியாவின் ஆண்ட்ரே எஸிபென்கோ - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ், சீனாவின் வெய் யி - ஜொ்மனியின் மத்தியாஸ் புளுபம் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.
புள்ளிகள் பட்டியலில், சிண்டாரோவ் (6.5) முதலிடத்தில் இருக்க, கரானா, கிரி ஆகியோா் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா் (தலா 4.5). நகமுரா, வெய் யி, பிரக்ஞானந்தா, புளுபம் ஆகியோா் 3-ஆம் நிலையை பகிா்ந்துகொண்டுள்ளனா் (தலா 3.5). எஸிபென்கோ 4-ஆம் நிலையில் (2.5) உள்ளாா்.