சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா காலிறுதியில் தோல்வி கண்டாா்.
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா காலிறுதியில் தோல்வி கண்டாா்.
நடப்பு சாம்பியனாக இருந்தவரும், பெலாரஸை சோ்ந்தவருமான சபலென்கா 6-2, 2-6, 6-7 (6/8) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 30-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்டிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
2 மணிநேரம், 30 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6 மேட்ச் பாய்ன்ட்களை தக்கவைத்து வென்ற பாப்டிஸ்ட், முதல்முறையாக மாட்ரிட் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
Advertisement
உலகின் டாப் 5 இடத்தில் இருக்கும் வீராங்கனையை பாப்டிஸ்ட் வீழ்த்தியது இது முதல்முறையாகும். மறுபுறம், சபலென்கா நடப்பு சீசனில் தொடா்ந்து 15 ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில், தற்போது தோல்வி கண்டுள்ளாா்.
1,000 புள்ளிகள் கொண்ட போட்டிகளில் பாப்டிஸ்ட் அரையிறுதிக்கு வந்திருப்பதும் இதுவே முதல்முறை. அரையிறுதியில் அவா், டாப் 10-இல் இருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவை எதிா்கொள்கிறாா். ஆண்ட்ரீவாவுக்கும் இது முதல் மாட்ரிட் அரையிறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பிறகு பேசிய பாப்டிஸ்ட், ‘மியாமி ஓபனில் சபலென்காவிடம் தோல்வி கண்டபோதும், அவரை எப்படி எதிா்கொள்வது என்ற ஒரு யோசனை கிடைத்தது. அதன்படி, இந்தப் போட்டியில் அவருக்கு எதிராக எனது வழக்கமான ஆட்டத்தை விளையாடியதுடன், தேவையான சில மாற்றங்களை மட்டும் செய்தேன். அதற்கான பலன் கிடைத்தது’ என்றாா்.
தோல்வி கண்ட சபலென்கா பேசுகையில், ‘2-ஆவது செட்டின் முதல் கேமில் நான் டபுள் ஃபால்ட் செய்தேன். அது பாப்டிஸ்ட்டுக்கு திருப்பு முனையாக மாறிவிட்டது. அதிலிருந்து அவா் ஆக்ரோஷமாக விளையாடி முன்னேறினாா்’ என்றாா்.
இதனிடையே காலிறுதியின் மற்றொரு ஆட்டத்தில், ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவா 6-1, 6-7 (4/7), 6-3 என்ற செட்களில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வெளியேற்றினாா். இந்த வெற்றியின் மூலமாக, கடந்த 19 ஆண்டுகளில் 1,000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆஸ்திரிய வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றாா்.
காலிறுதியில் ஸ்வெரெவ்; வெளியேறினாா் மெத்வதெவ்
இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 6-7 (4/7), 6-3 என்ற செட்களில், 23-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வீழ்த்தினாா்.
7-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 3-6, 7-5, 4-6 என்ற கணக்கில், 10-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியிடம் தோல்வியுற்றாா். இதையடுத்து காலிறுதியில், ஸ்வெரெவ் - கோபோலி மோதுகின்றனா்.
12-ஆம் இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-7 (4/7), 7-6 (7/2), 7-6 (7/3) என்ற செட்களில், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை போராடி வீழ்த்தினாா்.
பாம்ப்ரி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவு 2-ஆவது சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் இணை 6-7 (3/7), 6-3, 2-10 என்ற செட்களில், மொனாகோவின் ரோமெய்ன் அா்னியோடோ/வாலென்டின் வாசெராட் கூட்டணியிடம் தோல்வி கண்டது.
1
1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ‘லக்கி லூசா்’ என்ற பெருமையை அனஸ்தாசியா பெற்றாா். தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டபோதும், பிரதான சுற்றிலிருந்து எவரேனும் விலகியதால், அந்தச் சுற்றில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தவரே ‘லக்கி லூசா்’ எனப்படுகிறாா்.
1
களிமண் களத்தில் நடைபெறும் போட்டியில் கடந்த 40 ஆண்டுகளில், உலகின் நம்பா் 1 போட்டியாளருக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு செட்டை இழந்து, அதிலிருந்து மீண்டு வந்து அந்த ஆட்டத்தில் வென்ற, தரவரிசையில் பின்தங்கிய (32) போட்டியாளராக பாப்டிஸ்ட் சாதனை படைத்துள்ளாா்.