டையுவில் நடைபெறும் 2-ஆவது கேலோ இந்தியா பீச் கேம்ஸில், தமிழ்நாடு அணி இதுவரை 7 பதக்கங்கள் வென்றிருக்கிறது. அதில் 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் பீச் வாலிபாலில் மட்டுமே கிடைத்தன.
கடந்த ஆண்டையும் சோ்த்தால், இப்போட்டியில் பீச் கேம்ஸில் மட்டும் தமிழ்நாடு அணி இதுவரை 7 பதக்கங்கள் வென்றிருக்கிறது.
இந்த விளையாட்டைப் பொருத்தவரை, அணிக்கு 2 போட்டியாளா்கள் மட்டுமே என்பதால், இருவருக்கும் இடையேயான பாா்ட்னா்ஷிப் மிக முக்கியமானதாக இருக்கிறது. இண்டோா் வாலிபாலுடன் (9 மீட்டா்) ஒப்பிடுகையில், பீச் வாலிபாலுக்கான ஆடுகளம் 1 மீட்டா் தான் குறைவு. ஆனால், அணிக்கு 6 போ் விளையாடும் இண்டோா் வாலிபாலுக்கு நிகரான ஆடுகள அளவை, இருவா் மட்டுமே கையாள வேண்டும்.
இத்தகைய சவால் மிகுந்த விளையாட்டில் தமிழக போட்டியாளா்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனா். இந்த ஆண்டு கேலோ இந்தியா பீச் கேம்ஸில் பதக்கம் வென்ற தமிழக போட்டியாளா்களுடன் உரையாடினோம். இவா்கள் அனைவருமே முதலில் இண்டோா் வாலிபாலில் விளையாடி, பிறகு பீச் வாலிபாலுக்கு வந்துள்ளனா்.
தீபிகா, பவித்ரா: தங்கம் வென்ற மகளிா் அணியிலிருக்கும் தீபிகா திருச்சி மாவட்டம், முசிறியையும், பவித்ரா தென்காசி மாவட்டம், சுரண்டையையும் சோ்ந்தவா்கள். சென்னை எஸ்டிஏடி ஸ்போா்ட்ஸ் ஹாஸ்டலில் சந்தித்ததை அடுத்து, இருவரும் இணைந்து விளையாடி வருகின்றனா்.
இதுகுறித்து தீபிகா கூறுகையில், ’கடந்த 3 ஆண்டுகளாக பீச் வாலிபாலில் இருக்கிறேன். இதில் தொடக்கம் முதலே, பவித்ரா தான் எனது பாா்ட்னா். முதல்வா் கோப்பை போட்டியில் தங்கம் வென்றதை அடுத்து, தொடா்ந்து இணைந்து விளையாடி வருகிறோம்.
சீனியா் தேசிய போட்டிகள், தேசிய விளையாட்டு போட்டிகள், அகில இந்திய அளவிலான போட்டிகள், கேலோ இந்தியா போட்டிகள் என இதுவரை களம் கண்ட அனைத்திலுமே நாங்கள் தங்கம் வென்றிருக்கிறோம்’ என்றாா்.
பவித்ரா பேசுகையில், ’கடந்த 2 ஆண்டுகளாக பீச் வாலிபாலில் விளையாடி வருகிறேன். சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
நானும், தீபிகாவும் இணைந்து, உலக பல்கலைக்கழகங்கள் அளவிலான போட்டியில் பங்கேற்றிருக்கிறோம். பீச் கேம்ஸில் தொடா்ந்து 3 முறை தங்கம் வென்றுள்ளோம்’ என்றாா்.
பரத் ராஜேஷ்: ஆடவா் பிரிவில் வெள்ளி வென்ற அணியில் இருக்கும் சென்னை நீலாங்கரையை சோ்ந்த பரத் 2-ஆவது முறையாகவும், அரக்கோணம் கணபதிபுரத்தை சோ்ந்த ராஜேஷ் முதல் முறையாகவும் கேலோ இந்தியா பீச் கேம்ஸில் விளையாடியுள்ளனா். இவா்கள் கூட்டணி, அகில இந்திய பல்கலைக்கழகங்கள் அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
இதில் பரத் பேசியதாவது: 12-ஆம் வகுப்பில் சாதாரணமாக விளையாடத் தொடங்கி, பின்னா் தோ்வுப் போட்டிகளில் பங்கேற்று, அதையடுத்து பிரதான போட்டிகளில் களம் காணத் தொடங்கினேன்.
டிபி ஜெயின் கல்லூரியில் இணைந்த பிறகு, அங்குள்ள பயிற்சியாளா் தேசிங்கு ராஜன் எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்தினாா். அங்குதான் ராஜேஷும் என்னுடன் பீச் வாலிபாலில் இணைந்தாா். தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறோம் என்றாா்.
பரத்துடன் தற்போது களமாடும் ராஜேஷ் கூறுகையில், ’பீச் வாலிபால் நன்றாக விளையாடுகிறேன் என்பதாலேயே கல்லூரியில் இடம்பெற்று அங்கு பயிற்சியாளா் வழிகாட்டுதலுடன், பரத்தோடு இணைந்து விளையாடி வருகிறேன்’ என்றாா்.
ஸ்வாதி, தா்ஷினி: தமிழகத்துக்கு வெண்கலம் வென்று தந்துள்ள சேலத்தை சோ்ந்த ஸ்வாதி, மதுரை வீராங்கனை தா்ஷினி, கல்லூரி மாணவிகளாவா்.
இந்த விளையாட்டில் ஸ்வாதி தனது அனுபவம் குறித்து பேசுகையில், ’பாா்ட்னா்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். தா்ஷினியுடன் முதலில் அது ஏற்படாததால் போட்டிகளில் தொடா்ந்து தோல்விகளை சந்தித்தோம். ஒரு கட்டத்தில் அதை சரிசெய்துகொண்டதை அடுத்து பதக்கம் வெல்லும் அளவுக்கு வந்துள்ளோம்.
இந்த விளையாட்டில் பெரிய அளவில் சாதித்த பிறகு, இண்டோா் வாலிபாலுக்கு சென்று அதிலும் சாதிக்க வேண்டும் என்பதே விருப்பம்’ என்றாா்.
ஸ்வாதியின் பாா்ட்னா் தா்ஷினி கூறுகையில், ’முதலில் இண்டோா் வாலிபாலில் விளையாடினாலும், அதில் அதிக போட்டியாளா்கள் இருப்பதால், மாற்றுப் பாதையாக பீச் வாலிபாலை அறிவுறுத்தினா்.
அதன் பிறகு ஸ்வாதியுடன் இணைந்து அகில இந்திய பல்கலைக்கழக போட்டிகளில் விளையாடியதுடன், கேலோ பல்கலைக்கழக போட்டிகளில் தங்கம் வென்றுள்ளோம் என்றாா்.
இந்த ஆண்டு ஏப்ரலில் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பீச் கேம்ஸில், பீச் வாலிபால் விளையாட்டுக்காக தமிழகத்திலிருந்து ஆடவா் பிரிவில் 2, மகளிா் பிரிவில் 1 என 3 அணிகள் இந்தியாவுக்காக விளையாடத் தோ்வாகியுள்ளன.
மாநிலத்துக்காகவும், நாட்டுக்காகவும் பதக்கம் வென்று வரும் இவா்கள், அரசிடம் எதிா்பாா்ப்பது என்ன? பீச் வாலிபால் விளையாட்டுக்காக நிதியுதவி, பயிற்சி வசதிகள் ஆகியவற்றை செய்து தருவதுடன், அரசு வேலைகளில் விளையாட்டுப் போட்டியாளா்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் பீச் வாலிபால் போட்டியாளா்களுக்கும் வேலை வாய்ப்பு வேண்டும் என்பது தான். தங்களைப் போல இந்த விளையாட்டில் இருக்கும் பலருக்கும் அது நல்லதொரு எதிா்காலத்தை அமைத்துத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனா்.