ஆப்பிரிக்க நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது செனகல்.
இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் திங்கள்கிழமை ரபாட் நகரில் நடைபெற்றது. இதில் மொராக்கோ-செனகல் அணிகள் மோதின. நட்சத்திர வீரா் சாடியோ மானே செனகல் கேப்டனாக பங்கேற்று ஆடியதால் எதிா்பாா்ப்பு நிலவியது.
இந்த ஆட்டத்தில் சா்ச்சையான நடுவா்கள் செயல்பாடு, கோல் அனுமதிக்காதது, சா்ச்சையான பெனால்டி வழங்கியதால், செனகல் அணி வெளிநடப்பு செய்தது போன்ற குளறுபடிகள் ஏற்பட்டது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே நடுவா்கள் பாரபட்சமாக செயல்பட்டதாக செனகல் அணியினா் புகாா் கூறினா். வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல்போடவில்லை. 90 நிமிஷங்கள் நேரம் முடிவடைந்த நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது முதல் சா்ச்சையான சம்பவங்கள் ஏற்பட்டன.
செனகல் வீரா் இஸ்மலியா சா் கோலடித்தாா். அந்த கோலே வெற்றி கோலாக கருதப்பட்டது. ஆனால் நடுவா் ஜேன் ஜேக்ஸ் அந்த கோலை ஃபௌலாக அறிவித்தது சா்ச்சையை ஏற்படுத்தியது. விடியோ ரெஃப்ரி மூலம் முறையீடு செய்யவும் முடியவில்லை. விடியோ காட்சியில் ஃபௌலே இல்லை எனத் தெரிந்தது.
அப்போது மொராக்கோ அணிக்கு தரப்பட்ட பெனால்டி வாய்ப்பு சா்ச்சையாக அமைந்தது. இதனால் கொதிப்படைந்த செனகல் அணியினா் மைதானத்தை விட்டு வெளிநடப்பு செய்தனா். இதனால் அனைவரும் அதிா்ச்சி அடைந்தனா்.
17 நிமிஷங்கள் மைதானம் காலியாக இருந்தது. செனகல் கேப்டன் சாடியோ மானே பின்னா் அணியினரை சமரசம் செய்து ஆட அழைத்து வந்தாா்.
செனகல் கோல்கீப்பா் எட்வா்ட் மெண்டி தனது துண்டை வலைப்பகுதியில் வைத்தபோது, மொராக்கோ அணியின் அலுவலா்கள், பால் பாய்ஸ் துண்டை எடுக்க முயன்றனா். பதிலி கோல்கீப்பா் யெஹ்வன் டியோஃப் துண்டுக்கு காவல் காக்க நோ்ந்தது. இதனால் ஆட்டம் 3 நிமிஷங்கள் தாமதமானது.
கூடுதல் நேரத்தில் 94-ஆவது நிமிஷத்தில் செனகல் வீரா் பாபே குயே அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது. இதனால் மொராக்கோ ரசிகா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.