பிரென்ட்ஃபோா்டு - வோல்வ்ஸ் ‘டிரா’
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரென்ட்ஃபோா்டுடனான ஆட்டத்தை வோல்வ்ஸ் அணி 2-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரென்ட்ஃபோா்டுடனான ஆட்டத்தை வோல்வ்ஸ் அணி 2-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பிரென்ட்ஃபோா்டுக்காக மைக்கேல் கயோட் 22-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். தொடா்ந்து இகோா் தியாகோ 37-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, அந்த அணி 2-0 என முன்னிலை பெற்றது.
முதல் பாதி ஆட்டம் முடிவடைய இருந்த நிலையில், வோல்வஸ் தரப்பில் ஆடம் ஆம்ஸ்ட்ராங் 44-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் வோல்வ்ஸ் அணி முனைப்புடன் விளையாட, டோலு அரோகோடோ் 77-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஆட்டம் 2-2 என சமன் ஆனது.
எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஆட்டம் டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் பிரென்ட்ஃபோா்டு 45 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்திலும், வோல்வ்ஸ் 17 புள்ளிகளுடன் கடைசியாக 20-ஆவது இடத்திலும் உள்ளன.
லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் சோசிடட் 3-1 கோல் கணக்கில் ஒசாசுனாவை சாய்க்க, ராயோ வால்கேனோ - லெவான்டே அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.