முகப்பு
செய்திகள்

கோவாவின் கடைசி நேர கோலால் வெற்றியை தவற விட்ட சென்னையின் எஃப்சி!

சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட சென்னை அணி கோவாவின் கடைசி நேர கோலால் டிரா கண்டது.

Updated On : 22 மார்ச், 2026 at 8:00 PM
~
பகிர்:

சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட சென்னை அணி கோவாவின் கடைசி நேர கோலால் டிரா கண்டது.

ஐஎஸ்எல் 2026 சீசன் கால்பந்து தொடரையொட்டி சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்றிருந்த 4 ஆட்டங்களில் சென்னை 1 வெற்றி 1 டிரா, 2 தோல்விகளை கண்டிருந்தது.

சொந்த மைதானம் என்பதால் வெற்றியை பெறலாம் என களமிறங்கிய சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி ஆட முயன்றது. அதற்கு கோவாவும் சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடிய நிலையில், முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

இரண்டாம் பாதிதொடங்கியவுடன் 48-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் சாஹில் அளித்த பாஸை பயன்படுத்தி சென்னை வீரா் இா்ஃபான் கோலடித்தாா். இதனால் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

தொடா்ந்து கோவா கோல் பகுதியை முற்றுகையிட்டாலும் சென்னை வீரா்களால் கோலடிக்க முடியவில்லை. 87-ஆவது நிமிஷத்தில் டிரேஸிக் காா்னா் கிக்கை பயன்படுத்தி, ஹெட்டா் மூலம் கோலடித்தாா் ஜிங்கன். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தில் சென்னை வீரா் டேனியல் லால்லிம்புயா அடித்த ஷாட் கோல்பகுதிக்கு மேலே பறந்தது. இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.