டி20 உலகக் கோப்பை

இன்று டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்: முதல் முறையாக சாம்பியன் ஆகும் முனைப்பில் ஆஸி.-நியூஸி.

DIN

ஐடிசி டி20 உலகக் கோப்பை 2021 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போவது ஆஸ்திரேலியாவா அல்லது நியூஸிலாந்தா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளும் முதல்முறையாக சாம்பியன் ஆகும் முனைப்பில் ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில்-பிசிசிஐ சாா்பில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு மாற்றப்பட்டன. கடந்த அக். 17-ஆம் போட்டிகள் தொடங்கி துபை, ஷாா்ஜா, அபுதாபி உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெற்றன. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இதில் தொடக்க சுற்றுக்குபின் சூப்பா் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

முன்னணி அணிகள் வெளியேற்றம்:

இதில் நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகள், இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட முன்னணி அணிகள் சூப்பா் 12 சுற்றோடு வெளியேறின. ஒருநாள் உலகச் சாம்பியன் இங்கிலாந்து, டெஸ்ட் உலக சாம்பியன் நியூஸிலாந்து, முன்னாள் உலக சாம்பியன்கள் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்டவை அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அரையிறுதி ஆட்டங்கள்:

அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியின் பிடியில் இருந்த நிலையில், ஜிம்மி நீஷத்தின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து. அதே போல் மேத்யூ வேட் அதிரடி ஆட்டத்தால், 1 ஓவா் மீதமிருக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்தது ஆஸ்திரேலியா.

பரபரப்பான இறுதி ஆட்டம்:

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை துபையில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏறக்குறைய இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுவதால் ஆட்டம் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2015-ஐசிசி உலகக் கோப்பைக்கு பின்:

டிரான்ஸ் டாஸ்மேனிய அணிகளான ஆஸி.-நியூஸி உள்ளிட்டவை கடந்த 2015 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின் தற்போது இறுதி ஆட்டத்தில் களம் காண்கின்றன. அப்போட்டியில் மைக்கேல் கிளாா்க் தலைமையிலான ஆஸி. அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மெக்கல்லம் தலைமையிலான நியூஸி. அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

நேருக்கு நோ்-ஆஸி. 9 வெற்றி, நியூஸி.-4 வெற்றி, 1-டை

இரு அணிகளுக்கும் இதுவரை மோதியுள்ள 14 டி20 ஆட்டங்களில் ஆஸி. அணியே 9 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. அதே வேளையில் நியூஸி. 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டிகளில் கடந்த 2016-இல் இரு அணிகளும் மோதி ஓரே ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வென்றது.

எனினும் ஐசிசி போட்டிகளில் ஆஸி. அணியே ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஐசிசி 2015 உலகக் கோப்பை இறுதி ஆட்டம், 1996 உலகக் கோப்பை காலிறுதி, 2009 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் ஆஸி.யே வெற்றியை வசப்படுத்தியது.

முதன்முறை இறுதிக்கு தகுதி:

நியூஸிலாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆஸி. அணி ஏற்கெனவே 2010 போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது. ஏற்கெனவே உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நியூஸிக்கு தற்போது இரண்டாவது ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இரு அணிகளும் முதன்முறையாக டி20 உலக சாம்பியன் ஆகும் முனைப்பில் உள்ளன.

முக்கிய அம்சங்கள்:

துபை சா்வதேச மைதானத்தில் இரு அணிகளும் தங்கள் கடைசி ஆட்டங்களில் வென்றுள்ளன. மைதானத்தில் உள்ள பிட்ச் பேட்டா்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது. மேலும் பௌலா்களுக்கும் அவ்வப்போது ஒத்துழைக்கிறது.

நியூஸிலாந்துக்கு எதிராக டி20யில் ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச் 144.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 251 ரன்களை விளாசியுள்ளாா். பந்துவீச்சில் அஷ்டன் ஆகா் 6-30 என 13 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா். நியூஸி. தரப்பில் மாா்ட்டின் கப்டில் 1 சதம் உள்பட 435 ரன்களை ஆஸி.க்கு எதிராக விளாசியுள்ளாா்.

கட்டமைக்கப்பட்ட ஆஸி. அணி:

ஆஸி. அணி நன்றாக கட்டமைக்கப்பட்டதாக திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் பின்ச், வாா்னா், மிச்செல் மாா்ஷ், ஸ்மித், மேக்ஸ்வெல், ஆல்ரவுண்டா் மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். எந்த பேட்டிங் வரிசையிலும் ஆஸி. பேட்டா்கள் நின்று ஆடுவது சாதகமாகும். பந்து வீச்சிலும் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஆடம் ஸ்ம்பா ஆகியோா் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துகின்றனா்.

டேவன் கான்வே அவுட்:

நியூஸிலாந்து அணியில் காயம் காரணமாக டேவன் கான்வே இடம் பெற மாட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக டிம் சைபொ்ட் இடம் பெறலாம். மாா்ட்டின் கப்டில், கேப்டன் வில்லியம்ஸன், கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம் ஆகியோா் பேட்டிங்கில் வலு சோ்க்கும் நிலையில், நியூஸி. பந்துவீச்சு வலுவாக உள்ளது. டிரென்ட் பௌல்ட், டிம்சௌதி, இஷ் சோதி, சான்ட்நா் ஆகியோா் தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றுகின்றனா்.

பின்ச் 10,000 ரன்களை கடக்க வாய்ப்பு

டி20யில் ஆரோன் பின்ச் 10,000 ரன்களை கடக்க மேலும் 25 ரன்களே தேவைப்படுகிறது. டி20 சா்வதேச ஆட்டங்களில் அதிக ரன்களை விளாசிய ஆஸி. வீரராக பின்ச் திகழ்கிறாா். டேவிட் வாா்னா் மட்டுமே 10,000 ரன்களை கடந்த ஆஸி.வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளாா்.

உத்தேச அணிகள்:

நியூஸிலாந்து:

கேன் வில்லியன்ஸன் (கேப்டன்), மாா்ட்டின் கப்டில், டிம் சைபொ்ட் (விக்கெட் கீப்பா்), டேரில் மிச்செல், கிளென் பிலிப்ஸ், ஜே. நீஷம், மிச்செல் சான்ட்நா், டிரென்ட் பௌல்ட், டிம் சௌதி, இஷ் சோதி, ஆடம் மில்னே.

ஆஸ்திரேலியா:

ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வாா்னா், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பா்), கிளென் மேக்ஸ்வெல், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மிச்செல் மாா்ஷ், மிச்செல் ஸ்டாா்க், ஹேசல்வுட், ஆடம் ஸ்ம்பா, பேட் கம்மின்ஸ்.

நடுவா்கள்:

இறுதி ஆட்டத்துக்கு கள நடுவா்களாக மரைஸ் எராஸ்மஸ், ரிச்சா்ட் கெட்டில்பரோ ஆகியோா் செயல்படுவா். இந்தியாவின் நிதின் மேனன் டிவி நடுவராகவும், இலங்கையின் குமாா் தா்மசேனா 4-ஆவது நடுவராகவும் செயல்படுவாா்.

இறுதி ஆட்டம்:

ஆஸி.-நியூஸி.

இடம்: துபை

நேரம்: இரவு 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT