அதிமுக கூட்டணியை தொடரவே விரும்புகிறோம்: என். வரதராஜன்
சென்னை, ஜூலை 16: அ.தி.மு.க. வுடன் கூட்டணியைத் தொடரவே விரும்புகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் என். வரதராஜன் தெரிவித்தார். "தினமணி'க்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி: "கடந்த
தமிழ்நாடுஅதிமுக கூட்டணியை தொடரவே விரும்புகிறோம்: என். வரதராஜன்
சென்னை, ஜூலை 16: அ.தி.மு.க. வுடன் கூட்டணியைத் தொடரவே விரும்புகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் என். வரதராஜன் தெரிவித்தார். "தினமணி'க்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி: "கடந்த
சென்னை, ஜூலை 16: அ.தி.மு.க. வுடன் கூட்டணியைத் தொடரவே விரும்புகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் என். வரதராஜன் தெரிவித்தார்.
"தினமணி'க்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
"கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு இருந்த சாதகமான நிலைமை, தி.மு.க. அரசின் ஒரு ரூபாய் அரிசி திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவையே தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி பெற்ற வெற்றிக்குக் காரணம் என நாங்கள் கூறியிருந்தோம்.
தேர்தலில் எங்கள் கட்சியின் செயல்கள் குறித்த பல சுய விமர்சனங்களை முன் வைத்த அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் சில பலவீனங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை கூறியிருந்தோம்.
இந்த விமர்சனங்கள் அ.தி.மு.க.வை கொச்சைப்படுத்த வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் கூறப்படவில்லை. அக்கட்சி தன் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கூட்டுப் போராட்டங்களில் மேலும் முனைப்போடு பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே கூறினோம். எங்கள் விமர்சனம், வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு. க.வுக்கு பயன் அளிப்பதாக இருக்கும். இப்பிரச்னை குறித்து விரைவில் அ.தி.மு.க. தலைமையுடன் பேசுவோம்.
தமிழகத்தில் ஏராளமான மக்கள் பிரச்னைகள் உள்ளன. பல நெருக்கடி தரும் பிரச்னைகள் உருவாகும் நிலை உள்ளது. எனவே இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து, அ.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டு இயக்கங்களை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். இதைத்தவிர, எங்கள் கட்சி சுயேச்சையான பல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளது.
இத்தகைய சூழலில் வரும் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
கட்சியை நெறிப்படுத்த... நுகர்வு கலாசாரம் அதிகரித்துவிட்ட சூழலில், ஊழலும், ஊதாரித்தனமும் பெருகிவிட்ட நிலையில், சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எங்கள் கட்சியிலும் பொதுநலத்தை பிரதானமாகக் கொண்ட மனநிலையை கட்சியினர் மத்தியில் ஏற்படுத்த வேண்டியுள்ளது.
கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்யவே என்ற எண்ணம் உறுதியாக மனதில் பதிய வேண்டும். இதற்காக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கட்சியினர் அனைவரையும் நெறிப்படுத்தும் நடவடிக்கை அவசியம் என முன்னரே முடிவுக்கு வந்தோம்.
எங்களுக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவு என்பது, நெறிப்படுத்தும் நடவடிக்கை மிக அவசரம் என்பதை உணர்த்தியுள்ளது. எனவே இன்னும் 6 மாத காலத்துக்குள் தமிழகம் தழுவிய, கட்சியினரை நெறிப்படுத்தும் நடவடிக்கைகள், பயிற்சிகள் நடைபெறும்.
இடதுசாரி ஒற்றுமை: மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியது மிக அவசியம். கடந்த தேர்தலில் தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தையின்போது, இரு கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து இப்போது இரு கட்சிகளும் பேசி வருகிறோம்.
இனிவரும் தேர்தல்களில், தொகுதி உடன்பாடு தொடர்பாக, இரு கட்சிகளுக்கும் இடையே ஒத்த கருத்தையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என கருதுகிறோம்.
விஜயகாந்துடன் கூட்டணி... எதிர்காலத்தில் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏற்படுவது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் கூட்டணி மூலம் பெரிய கட்சிகளின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும் என்பதை அகில இந்திய அளவில் எங்கள் கட்சிதான் நிரூபித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் அரசியலில் ஏற்படும் வளர்ச்சிப் போக்கை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்' என்றார் வரதராஜன்.