நிஷா புயல்: விவசாயிகளுக்கு ரூ.750 கோடி
கடந்த ஆண்டு நிஷா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ரூ.750 கோடிக்கும் மேல் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க உள்ளது.
தமிழ்நாடுநிஷா புயல்: விவசாயிகளுக்கு ரூ.750 கோடி
கடந்த ஆண்டு நிஷா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ரூ.750 கோடிக்கும் மேல் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க உள்ளது.
சென்னை, ஜூன் 18: கடந்த ஆண்டு நிஷா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ரூ.750 கோடிக்கும் மேல் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க உள்ளது.
தமிழகத்தில் கடந்த 19.11.2008 முதல் 28.11.2008 வரை நிஷா புயல் மழையால் கடும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பெருமளவில் சேதமடைந்தது.
ரூ.404 கோடி நிவாரணம்: தமிழகமெங்கும் 4 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் உள்பட, 5 லட்சத்து 97 ஆயிரம் ஏக்கரில் விவசாயப் பயிர்கள் சேதமடைந்ததாக மாநில அரசு கணக்கிட்டது.
அரசின் சார்பில் ரூ.404 கோடி நிவாரண நிதியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. டெல்டா மாவட்ட நெல் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் நிவாரணம் அளிக்கப்பட்டது.
பயிர்க் காப்பீடு: இதற்கிடையே இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி நெல் சாகுபடியை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு 15.12.2008 வரை அளிக்கப்பட்டிருந்தது.
ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு சிறு விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு ரூ.142-ம், பெரிய விவசாயிகளிடமிருந்து ரூ.158-ம் சந்தா வசூலிக்கப்பட்டது.
சாகுபடி கடன் பெற்ற விவசாயிகள், வங்கிகள் மூலம் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். அவர்களைத் தவிர ஏராளமான விவசாயிகள் தாமாகவே முன்வந்து திட்டத்தில் இணைந்தனர். காப்பீட்டு சந்தாத் தொகையில் 50 சதவீதத்தை மாநில அரசு மானியமாக வழங்கியதும் அதிகம் பேர் இணைய காரணமாக இருந்தது.
ரூ.750 கோடி இழப்பீடு: இந்நிலையில் நிஷா புயலால் பாதிப்படைந்த தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.750 கோடிக்கும் மேல் இழப்பீடாகக் கிடைக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகை பெறுவார்கள் எனத் தெரிகிறது.
காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொகை செப்டம்பர் மாதத்துக்குள் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
சாதனை அளவு: தமிழகத்தில் 2006 வரை ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கும் குறைவாகவே பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 2007-ம் ஆண்டில்தான் ரூ.280 கோடி அளிக்கப்பட்டது. ஆனால் 2008-ம் ஆண்டுக்கு ரூ.750 கோடிக்கும் மேல் வழங்கப்பட உள்ளது. இது பயிர்க் காப்பீடு இழப்பீட்டில் சாதனை அளவு எனக் கூறப்படுகிறது.
எல்லா நிலங்களுக்கும் பயிர்க் காப்பீடு: இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் கூறியது:
பயிர்க் காப்பீடு திட்டத்தின் பலன் மகத்தானது. தமிழகத்தில் ஒவ்வொரு ஏக்கர் சாகுபடி நிலமும் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். இதுவே எங்கள் சங்கத்தின் கனவாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டு இவ்வளவு பெரிய தொகை காப்பீட்டு இழப்பீடாக கிடைப்பது விவசாயிகளிடம் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார் ரங்கநாதன்.