கோடை ரயில்களின் பொதுப் பெட்டிகளில் குடிநீர் இல்லாததால் பயணிகள் அவதி
சென்னை,ஏப்.11: கோடையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களின் பொதுப் பெட்டிகளில் செல்லும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இப்போது கோடை வெயில் சுட்டெரித்து வரு
சென்னை,ஏப்.11: கோடையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களின் பொதுப் பெட்டிகளில் செல்லும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இப்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால், பஸ், ரயில்களில் பகலில் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வைகை, குரூவாயூர், சென்னை} கோவை விரைவு ரயில், இன்டர்சிட்டி, வெஸ்ட் கோஸ்ட் உள்ளிட்ட பகல் நேர விரைவு ரயில்களில் சமையல் அறை பெட்டிகளும் (பாண்ட்ரி கார்) இணைக்கப்படும்.
இதன் மூலம், முதல் வகுப்பு, 2}ம் வகுப்பு "சேர் கார்' பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குடிநீர் பாட்டில்களை ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர்களே நேரில் சென்று விற்பனை செய்கின்றனர்.
புறக்கணிக்கப்படும் பொதுப் பெட்டிகள்: ஆனால், முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளில் செல்லும் பயணிகள் மிகவும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
சமையல் அறைப் பெட்டிகளில் இருந்து குடிநீர், சிற்றுண்டி ஆகியவற்றை ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர்கள், சாதாரண மக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் பொதுப் பெட்டிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை. நெரிசல் அதிகரிப்பு: தமிழகம் முழுவதும் இப்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்கள் மட்டுமன்றி கோடை சிறப்பு ரயில்களிலும் நெரிசல் அதிகரித்துள்ளது. மறுமார்க்கத்திலும் இதே நிலை தொடர்கிறது.
இந்த ரயில்களில் தலா 2 அல்லது 3 முன்பதிவு செய்யாத பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இவை செல்லும் வழித்தடத்தில், பெரும்பாலான ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட அளவுக்கும் மேல் அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்யாத பொது டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.
இதனால் ஏற்படும் நெரிசல் காரணமாக கழிப்பறைகள் அருகேயும், படிக்கட்டுகள் மீதும் நின்று கொண்டே பலர் பயணம் செய்கின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் குடிநீர் வாங்கக் கூட வெளியே வர இயலாமல், "கூண்டில் அகப்பட்ட' நிலையில் பரிதவிக்கின்றனர்.
குறைந்தபட்சம் பொதுப் பெட்டிகளில் உள்ள பயணிகளுக்காவது பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக விநியோகிக்க ரயில்வே துறை முன்வர வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கும் பல்வேறு அமைப்புகளாவது ரயில் பயணிகளின் தாகம் தீர்க்க முன்வர வேண்டும்.
இரவில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் மின்கோளாறு ஏற்படுவதைத் தடுக்கவும், கழிப்பறைகளுக்கு போதிய நீர் விநியோகிக்கவும் அனைத்து ரயில்வே கோட்ட அளவிலும் ஆய்வு செய்து தெற்கு ரயில்வே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.