திருச்சி, ஏப்.23: திருச்சியிலுள்ள அண்ணா அறிவியல் மையம் } கோளரங்கத்தில் விரைவில் அமைக்கப்படவிருக்கிறது மாதிரி மூலிகைப் பண்ணை.
தமிழகத்தில் சென்னை பிர்லா அறிவியல் மையம்} கோளரங்கத்தைத் தொடர்ந்து, மாநிலத்தின் மையப் பகுதியாக
விளங்கி வரும் திருச்சியில் அறிவியல் மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 1999 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணாவின் பெயரைக் கொண்டு புதிய அறிவியல் மையம்} கோளரங்கம் தொடங்கப்பட்டது.
அறிவியல் உலகில் நிகழும் சாதனைகள், புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த தகவல்கள் கோளரங்கத்தில் காட்சியிடப்பட்டு வருகின்றன.
மேலும், செயல்முறை அறிவியல் காட்சிக் கூடம், சுற்றுச்சூழல் காட்சிக் கூடம், முப்பரிமாணத் திரையரங்கு (3டி தியேட்டர்) போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது அறிவியல் மையம்.
இவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு பல்வேறு புதிய செயல்பாடுகளைத் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் அறிவியல் மையம் அடுத்து மாதிரி மூலிகைப் பண்ணையையும் அமைக்கிறது.
அறிவியல் மைய வளாகத்தில் சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் இந்த மாதிரி மூலிகைப் பண்ணை அமைக்கப்படுகிறது.
இதற்காக புதுச்சேரி பகுதியிலிருந்து மருத்துவக் குணங்கள் கொண்ட பல்வேறு அரிய வகை மூலிகைகள் இந்தப் பண்ணைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
மூலிகைப் பண்ணை ஏன்: "அறிவியல் மையத்துக்கு வந்தால் எல்லாவற்றையும் தெரிந்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களது உயரிய கண்டுபிடிப்பு போன்ற விவரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் காட்சிக் கூடங்களில் ஏராளமான காட்சிப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு புதிய செயல்பாடுகளை அறிவியல் மையத்தில் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகைகளையெல்லாம் சேகரித்து, அவற்றைக் கொண்டு மாதிரி பண்ணை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான பணிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
ஒவ்வொரு மூலிகையின் பெயர், அதன் மருத்துவக் குணங்கள், பயன்பாடுகள் போன்ற விவரங்கள் இந்த மாதிரிப் பண்ணையில் வைக்கப்பட்டிருக்கும்.
பல மூலிகைகளின் பயன்பாடு பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. ஆனால், இது பற்றிய விவரம் பலருக்குத் தெரிவதில்லை.
மருத்துவ குணம் கொண்ட மூலிகை குறித்து ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையிலேயே நாங்கள் இந்த மாதிரி மூலிகைப் பண்ணையை அமைக்கிறோம்' என்கிறார் அண்ணா அறிவியல் மையத்தின் திட்ட இயக்குநர் தி.மோ. அழகிரிசுவாமி ராஜு.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது:
தொடக்கத்தில் குறைந்தளவு மூலிகைகள் இருந்தாலும், படிப்படியாக பண்ணையில் மூலிகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இதற்காக அறிவியல் மைய வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மூலிகைப் பண்ணை அமைப்பதற்காக ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், அறிவியல் மையத்தில் மண்புழு உரத்தின் பயன்பாடு குறித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மாதிரி மூலிகைப் பண்ணை அமைக்கும் பணிகளை முடித்து விரைவாக முடிக்கப்பட்டு, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்றார் அழகிரிசுவாமி ராஜு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.