முகப்பு
தமிழ்நாடு

அரசின் 2 ஏக்கர் நிலம் பெற போராடும் தியாகியின் பேரன்!

ஒசூர், ஆக. 14: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது 200 ஏக்கர் நிலத்தை விற்று,  சுதந்திர வேள்வியை மக்களிடம் பரப்பிய, "ஒசூர் காந்தி' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பி.கே.தேவய்யாவின் பேரன் வ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:53 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:36 PM

ஒசூர், ஆக. 14: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது 200 ஏக்கர் நிலத்தை விற்று,  சுதந்திர வேள்வியை மக்களிடம் பரப்பிய, "ஒசூர் காந்தி' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பி.கே.தேவய்யாவின் பேரன் வரதராஜ் (80), தமிழக அரசு வழங்கும் 2 ஏக்கர் நிலம் பெற முடியாமல் தவித்து வருகிறார்.

 ஒசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ளது முதுகானப்பள்ளி. இங்கு கெமபேகவுடு மகனாக 1869-ல் பிறந்தவர் பி.கே.தேவய்யா. இவர் 1890-ல் பி.ஏ. பட்டம் பெற்றார். இவருக்கு முதுகானப்பள்ளி, பாரந்தூரில் 200 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.

 ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி போன்றவர்களுடன் இணைந்து சுதந்திர வேள்வியை மக்களிடம் பரப்புவதற்காக பெங்களூரில் அச்சகத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து விநியோகம் செய்து வந்தார் பி.கே.தேவய்யா. உப்பு சத்யாகிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

Advertisement

 இவர் தனது 200 ஏக்கர் நிலத்தை விற்று நாட்டின் சுதந்திரத்துக்காக போராட்டம் நடத்தவும், மக்களை ஒருங்கிணைக்கவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் செலவிட்டார். முதுகானப்பள்ளியில் இவர் தொடங்கிய ஆனந்த ஆசிரமத்தில் மகாத்மா காந்தி 15 நாள்கள் தங்கி சுதந்திரப் போராட்ட விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.  

 சுதேசி இயக்கத்தில் பங்கு கொண்ட காந்தி அன்னியத் துணிகளை புறக்கணித்து, ராட்டினம் மூலம் நூல் நூற்று கதர் ஆடையை அனைவரையும் உடுக்க வைத்தார். காந்தி இங்கு வந்து தங்கியபோது பி.கே.தேவய்யாவிற்கு 2 ராட்டினங்களை வழங்கினார். அவை இன்றும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 பட்டதாரியான பி.கே.தேவய்யா, ஜப்பான் தொழில் நுட்பத்தை விவசாயத்தில் புகுத்தி அதிக மகசூல் கண்டவர். மேலும், இத் தொழில் நுட்பத்தை கேரளம், ஆந்திரம், கர்நாடகத்திலும் செயல்படுத்திக் காட்டினார். இப் பகுதி மாணவர்களின் கல்விக்காக பள்ளிகள் மற்றும் கோயில்களை கட்டியுள்ளார்.

 15.08.1947-ல் இரண்டு கற்களை முதுகானப்பள்ளி காந்தி பூங்காவில் நட்டு, அதில்  "சுதந்திரம் பெற்றுவிட்டோம், நாம் சுதந்திரம் பெற்று விட்டோம். வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே, இன்று 15.08.1947-சுதந்திர தினம், தர்மம் தலை காக்கும், சத்தியம் வெல்லும்' என தெலுங்கு மொழியில் தங்களது வெற்றியை எழுத்துகளாக செதுக்கி, சுதந்திரப் போராட்டத்தின் மகிமையை வெளிப்படுத்தியுள்ளார்.

 இவ்வாறு நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகி தேவய்யாவின் பேரன் வரதராஜ், தற்போது முதுகானப்பள்ளியில் ஒரு சென்ட் நிலம்கூட இல்லாமல் இடிந்த வீட்டில் வசித்து வருகிறார்.

 இவர், தனது நிலை குறித்து மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்துள்ளார்.

 சுதந்திரப் போராட்டத்திற்காக 200 ஏக்கர் நிலத்தை விற்ற தங்கள் குடும்பத்திற்கு, தேன்கனிக்கோட்டை வட்டத்தில் தமிழக அரசு வழங்கும் 2 ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 காந்தி தங்கிய ஆனந்த ஆசிரமத்தை தியாகி தேவய்யாவின் நினைவிடமாக அமைக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என பல முறை மனு அளித்தும் அரசிடமிருந்து பதில் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.