ஆற்றைக் கடக்க அவதிப்படும் 30 கிராமங்கள்
திருத்தணி, ஆக. 20: திருத்தணி நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்டாததால் மழைக் காலங்களில் பொதுமக்கள் படாதபாடு படுகின்றனர். ÷திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் அருகில் நந்தி ஆறு ஓடுகிறது. ஆற்றின் வலது பக்கத்தில் ஸ
திருத்தணி, ஆக. 20: திருத்தணி நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்டாததால் மழைக் காலங்களில் பொதுமக்கள் படாதபாடு படுகின்றனர்.
÷திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் அருகில் நந்தி ஆறு ஓடுகிறது. ஆற்றின் வலது பக்கத்தில் ஸ்ரீ கோட்ட ஆறுமுக சுவாமி திருக்கோயிலும், இடதுபக்கத்தில் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் கோயிலும் உள்ளது. ஆற்றின் இரு புறங்களிலும் அமைந்துள்ள இக்கோயில்களுக்கு தினசரி வரும் பக்தர்கள் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
÷மேலும் திருத்தணி அருகே உள்ள மேதினிபுரம், வினாயகபுரம், பட்டாபிராமாபுரம், காசிநாதபுரம், வேலஞ்சேரி, சீனிவாசபுரம், பெருங்களத்தூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திருத்தணியில் உள்ள பள்ளிக்குச் செல்லவும் குறுக்கே நிற்கிறது நந்தி ஆறு.
திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் கிராமப்புற நோயாளிகளுக்கும் இதுதான் வழி. இப்போது மழைக்காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாகி வருகிறது. மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது நோயாளிகள், பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் ஆற்றில் இறங்கி கடந்து செல்கின்றனர்.
÷மேலும் பலத்த மழை பெய்யும்போது ஆற்றில் 10 அடிக்கு மேல் தண்ணீர் ஓடும் நிலையில் ஆற்றைக் கடக்க முடியாமல் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி வரவேண்டியுள்ளது.
÷இந்த வேதனைகளிலிருந்து விடுபட தரைப்பாலம் கட்ட வேண்டும் என நகராட்சியிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை மனு கொடுத்தும் எவ்விதப் பயனுமில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
÷திருத்தணி நகராட்சி நிர்வாகம் நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்ட வரைபடம் தயாரித்து நிதி கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
÷கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் வந்து பார்வையிடுவதும், செல்வதுமாக இருக்கிறார்களே தவிர, யாரும் இதுவரை தரைப்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்கின்றனர் இப்பகுதி இளைஞர்கள்.
÷இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் சேஷாசலம் கூறியது: சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அரக்கோணம், காஞ்சிபுரம் செல்ல திருத்தணிக்குள் வந்துதான் செல்கின்றன. ஆனால் நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டால் நகருக்குள் வராமல் புற வழியிலேயே வாகனங்கள் செல்லலாம். இதனால் திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களிலும் ஏற்படும் வாகன நெரிசலைத் தடுக்கலாம் என்றார்.
÷தற்போது மழை காரணமாக நந்தி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் இவ்வழியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.