சென்னை, ஜன.20: சமச்சீர் கல்வி திட்டத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில், சிபிஎஸ்இ முறைக்கு மாற தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகங்கள் முயற்சித்து வருவது தெரியவருகிறது.
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண வசூலை முறைப்படுத்த சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இப்போது செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை 100-லிருந்து கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கான தடையில்லாச் சான்றை வழங்குவதில் மாநில அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
வரும் கல்வியாண்டில் முதல் மற்றும் 6}ம் வகுப்பில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாநிலப் பாட திட்டம், மெட்ரிகுலேஷன், ஓரியண்டல், ஆங்கிலோ}இந்தியன் என நான்கு வகை பாட திட்டங்களையும் ஒன்றிணைத்து பொதுக் கல்வி வாரியம், பொது பாடதிட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கட்டண வசூல் தொடர்பான தனியார் பள்ளிகளின் முழுவிவரத்தைத் திரட்ட படிவத்தைத் தயாரித்துள்ளது. இப்போது மாவட்ட வாரியாக தனியார் மெட்ரிக் பள்ளிகளின் முழு விவரமும் திரட்டப்பட்டு வருகிறது.
அரசின் கட்டண முறைப்படுத்துதல் சட்டம் மற்றும் பொது பாடதிட்டம் ஆகியவை மெட்ரிக் பள்ளிகளை அதிருப்தியடைய வைத்திருக்கும் சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் ஏராளமான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ கல்வி வாரியத்திற்கு மாற முடிவு செய்துள்ளன.
வரும் கல்வியாண்டிலேயே புதிய பாடதிட்டத்துக்கு மாறுவதற்கான முதற்கட்ட பணிகளிலும் அப்பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
""பொது பாடதிட்ட முறை மாணவர்களின் எதிர்காலத்துக்கு உகந்தது அல்ல. எனவே எங்கள் பள்ளியிலேயே ஆரம்பிக்கப்பட உள்ள சிபிஎஸ்இ பாடதிட்ட வழியில் உங்கள் குழந்தைகளை மாற்றிக் கொள்கிறோம். அதற்காக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள் என்று சென்னையில் சில மெட்ரிக் பள்ளிகள் பெற்றோர்களை மூளைச் சலவை செய்து வருகின்றன.
""என் குழந்தை சென்னையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். இந்நிலையில் எல்கேஜி, யுகேஜி படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் மெட்ரிக் பள்ளி திட்டத்திலேயே தொடர விருப்பமா அல்லது சிபிஎஸ்இ கல்வி திட்டத்தில் சேர விருப்பமா என தனியார் பள்ளி நிர்வாகிகள் இப்போதே கேட்டு வருகின்றனர்'' என்றார் தாம்பரத்தைச் சேர்ந்த ராஜா.
இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியது: மாநிலத்தில் வரும் கல்வியாண்டுக்கு 10 புதிய சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க பள்ளிக் கல்வித்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளன. மெட்ரிக் கல்வி வாரியத்தில் இருந்து சிபிஎஸ்இ கல்வி திட்டத்திற்கு மாறுவதற்கும் ஒரு தனியார் பள்ளி விண்ணப்பித்துள்ளது. ஆனால் இப்படி ஒரு பாடதிட்டத்தில் இருந்து மற்றொரு பாடதிட்டத்துக்கு மாறுவதற்கான அனுமதி வழங்குவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.
"சிபிஎஸ்இ கல்வி திட்டத்தில் புதிய பள்ளி தொடங்க வேண்டுமெனில் மாநில பள்ளிக் கல்வித்துறையிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும். அதேசமயத்தில் மெட்ரிக் பள்ளி கல்வி திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ கல்வி திட்டத்திற்கு மாற வேண்டும் என்றாலும் மாநில அரசின் தடையில்லாச் சான்று பெற வேண்டும்' என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
"பொது பாடதிட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் ஒரேமாதிரியான பாடதிட்டமே நடைமுறையில் இருக்கும். இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் படிக்க வைக்க இப்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கேற்றார்போல் தனியார் பள்ளிகளும் தங்களை சிபிஎஸ்இ பள்ளிகளாக அடையாளப்படுத்திக் கொண்டால்தான் வியாபாரம் லாபகரமாக இருக்கும் என்றும் எண்ணத் தொடங்கியுள்ளனர்.
இப்படி புதிய பள்ளி தொடங்குவதற்கான தடையில்லாச் சான்றை அரசு தான் வழங்க வேண்டும். அப்படி தடையில்லா சான்றை வழங்கும்பட்சத்தில், அரசே தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது என்பதுடன் நீண்டகாலமாக போராடி கொண்டுவரப்பட்ட பொதுக் கல்வி வாரியம், பொது பாடதிட்டமும் வீணாகிவிடும் என்பதே கல்வியாளர்களின் அச்சம்.
தங்கள் பள்ளி சிபிஎஸ்இ-க்கு மாறுவதன் நோக்கம் என்ன என்று கேட்டு தனியார் பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும் இப்பள்ளிகளுக்கு தடையில்லாச் சான்றை அரசு வழங்கக் கூடாது'' என்றார் பொதுப் பள்ளிக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.