தமிழ்நாடு

திண்டாட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி!

கோவை : தமிழகத்தின் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளில் முன்னிலையில் இருக்கும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி), ஆசிரியர் பற்றாக்குறையால் திண்டாடுகிறது.  மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும

சிவ. மணிகண்டன்

கோவை : தமிழகத்தின் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளில் முன்னிலையில் இருக்கும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி), ஆசிரியர் பற்றாக்குறையால் திண்டாடுகிறது.

 மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் சூழலில், போதிய ஆசிரியர்கள் இல்லாதது பெரும் குறையாகவே இருக்கிறது.

 பயிற்சி பெற்ற பொறியாளர்களை உருவாக்குவதற்காக 1945-ல் ஆர்தர் ஹோப் தொழில்நுட்பக் கல்லூரி என்ற பெயரில் இக் கல்லூரி துவங்கப்பட்டது. பின்னர் 1950-ல் தடாகம் சாலை பகுதியில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் கட்டடவியல், மின்னியல் பிரிவுகளும் அதைத் தொடர்ந்து இயந்திரவியல் பிரிவும் தொடங்கப்பட்டன. 1970-ல் முதுநிலை பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

  தற்போது கட்டடவியல், இயந்திரவியல், உற்பத்திப் பொறியியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், மின்னியல் மற்றும் கருவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுடன் இக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

 கட்டடவியல், இயந்திரவியல், மின்னியல் பிரிவுகளில் 60 ஆக இருந்த மாணவர்களின்  எண்ணிக்கை கடந்த ஆண்டு முதல் 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயிரித் தொழில்நுட்பத் துறையில் 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். மற்ற துறைகளில் தலா 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

 மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திக் கொண்டே வந்தாலும், ஆசிரியர்

காலியிடங்களைப் பூர்த்தி செய்ய உயர்கல்வித் துறை தாமதம் செய்து வருகிறது.

இதனால் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் தாற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். வகுப்பு எடுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ரூ.100 வழங்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரத்துக்குள்தான் சம்பளமாகக் கிடைக்கும். இதனால், தாற்காலிகப் பணிக்கும் ஆசிரியர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதாகக் கூறுகின்றனர் ஜிசிடி கல்லூரி ஆசிரியர்கள்.

  இக் கல்லூரியில் மொத்தமுள்ள ஒன்பது துறைகளில் 159 ஆசிரியர் பணியிடங்களில் 55 பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவருகிறது. ஆசிரியர் அல்லாத அலுவலர்களில் 78 இடங்களும், நிர்வாகப் பிரிவில் 13 இடங்களும், துப்புரவாளர், காவலர் உள்ளிட்ட அடிப்படைப் பணியிடங்களில் 37 இடங்களும் காலியாக உள்ளனவாம்.

 மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னியல் மற்றும் கருவியியல் ஆகிய இரு துறைகளையும் ஒரே துறைத் தலைவரும், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளையும் ஒரே துறைத் தலைவரும் கவனிக்க வேண்டிய நிர்பந்தம்.  

 வேதியியல் துறையில் மூவர், கணிதவியலில் ஐவர் என காலிப் பணியிடங்களின்  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட ஜிசிடி நூலகத்துக்கு ஒரேயொரு நூலகர் மட்டுமே உள்ளார். அவரும் அடுத்த சில மாதங்களில் ஓய்வு பெறப் போவதாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு நூல்களைக் கொடுக்கவும் அவற்றைத் திரும்பப் பெறவும் மிகவும் சிரமமாக இருப்பதோடு,  நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

 அதேபோல, உடற்கல்வித் துறையில் உடற்கல்வி இயக்குநர் மற்றும் பயிற்றுநர் என இரு பணியிடங்கள் உள்ளன. இதில் உடற்கல்வி இயக்குநர் மட்டுமே இருந்தார், அவரும் மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதால் அத் துறையில் ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. இதனால் கட்டடவியல் துறை ஆசிரியர் தற்போது கூடுதலாக உடற்கல்வித் துறையையும் கவனித்து வருகிறார்.

 உயிரித் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சியை அடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிடெக் உயிரித் தொழில்நுட்பப் பாடப்பிரிவு துவங்கப்பட்டது. ஆனால், இத் துறைக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் ஒன்றுகூட நிரப்பப்படவில்லை. இத் துறையில் பணியாற்றும் துறைத் தலைவர் உள்பட 12 ஆசிரியர்களும் தாற்காலிகப் பணியிடத்தில்தான் உள்ளனர்.

 தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் நிலவரம், இதர கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய அரசுப் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்தான் அனுப்பப்படுகின்றனர். ஆனால், அரசுப் பொறியியல் கல்லூரிகளிலேயே ஆசிரியர் பற்றாக்குறை போன்ற குறைபாடுகள் இருக்கின்றன. சில நேரங்களில் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் இதைப் பற்றிக் கேட்கும்போது எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. மாநிலத்தில் சிறந்த கல்லூரியாக இருக்கும் ஜிசிடியில் காலியாக உள்ள பணியிடங்களை இன்னும் காலதாமதப்படுத்தாமல் நிரப்ப அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT