முகப்பு
தமிழ்நாடு

மலைப்பகுதிகளில் எஸ்.எஸ்.ஏ. பள்ளிகள் மூடல்: கேள்விக் குறியாகும் குழந்தைகளின் கல்வி

பழனி:   பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ) சார்பில் இயங்கி வந்த பல மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மலைவாழ் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.   க

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:54 PM
பகிர்:

பழனி:   பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ) சார்பில் இயங்கி வந்த பல மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மலைவாழ் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

  கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் ஆள்நடமாட்டம் அதிகமில்லாத பகுதியாகவும், சாலையில் இருந்து மலைப் பள்ளத்தாக்குகளில் சுமார் 5 கி.மீ. பயணித்தால் மட்டுமே செல்லும் இடங்களாகவும் இருந்தன.

  இதுபோன்ற இடங்களில் கடந்த காலங்களில் மாவோயிஸ்ட்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அதிரடிப் படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி நவீன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  மலைவாழ் மக்களிடம் கல்வியும், விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததே பயங்கரவாதம் வளர முக்கியக் காரணம் என்பது அப்போது உணரப்பட்டது.

 இதனால் மலைவாழ் மக்கள் வசிக்கும் கருவேலம்பட்டி, மூங்கில் பள்ளம், வாலநேச விலக்கு, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொண்டு நிறுவனங்கள் மூலம் உண்டு, உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.

  குழந்தைகளுக்கு 3 நேரம் உணவு, உடை, சீருடை, புத்தகம், பாய் மற்றும் தலையணை அனைத்தும் வழங்கப்பட்டதால் பலரும் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தனர். இப்போது இந்த மையங்கள் அனைத்தும் கவனிப்பு இன்றி மூடப்பட்டுள்ளன.

  இதுகுறித்து அங்கு மையம் நடத்தி வருவோர் தெரிவித்ததாவது:

  மையங்களை ஆய்வு செய்ய சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து வரும் அதிகாரிகள் உடனே வந்து பார்க்கும் வகையில் சாலை வசதி உள்ள இடங்களில் மையம் இருந்தாலே அனுமதி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என மாவட்டக் கூடுதல் திட்ட அலுவலரான பெண் அதிகாரி ஒருவர் வாய் மொழி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அரசே சென்று நடத்த முடியாத இடங்களில்தான் தொண்டு நிறுவனங்கள் மூலம் மையம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலை வசதி இருந்தால் அங்கு அரசே பள்ளியைத் துவக்கி விடலாம். மலைவாழ் குழந்தைகள் இருக்கும் இடத்திலேயே சென்று கல்வி வழங்குவதுதான் சரியானது.

  இதைக் கண்காணிக்க எஸ்.எஸ்.ஏ.வில் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இவர்களிடம் சம்பந்தப்பட்ட மையங்களை அதிகாரிகள் அடிக்கடி சென்று ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யாமல் மையங்களை மூடியுள்ளது மலைவாழ் மக்களை பாதிக்கச் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

  இதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய கருவேலம்பட்டி மலைக் கிராம எஸ்.எஸ்.ஏ. பள்ளி இப்போது 58 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள் என 5 பேருடன் அரசுப் பள்ளியாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  பழனி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்த கடமன்ராவு, பொந்துப்புளி, கடைசிக்காடு எஸ்.எஸ்.ஏ. பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக மாறியுள்ளன.

  தற்போது வடகவுஞ்சி அருகேயுள்ள பட்டியக்காடு எனும் மலைவாசிகள் வசிக்கும் பகுதியில் சுமார் 75 குழந்தைகள் கல்விக்காக ஏங்கி வருகின்றனர். இங்கு இதுவரை எந்த மையமும் திறக்கப்பட்டதே இல்லை.

  கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் இடைநிற்பதைத் தவிர்த்தல், குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி, 8-ம் வகுப்பு வரை கல்வி கற்க வைத்தல் எனப் பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில்  மலைவாழ் மக்களை புறக்கணித்தால் அக்குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

  ஆகவே மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் எஸ்.எஸ்.ஏ. மூலம் நடத்தப்படும் மையங்களை மீண்டும் திறக்கவும், மேலும் பல பகுதிகளில் புதிய மையங்களைத் துவக்கவும் மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.