தமிழகத்தில் ஆள் இல்லாத 46 லெவல் கிராசிங்குகள் மாற்றப்படும்: தெற்கு ரயில்வே
சென்னை, ஜூன் 21: தமிழகத்தில் ஆள் இல்லாத 46 லெவல் கிராசிங்குகளை இந்த ஆண்டு மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை கடக்கும் போது விபத்தில் ச
சென்னை, ஜூன் 21: தமிழகத்தில் ஆள் இல்லாத 46 லெவல் கிராசிங்குகளை இந்த ஆண்டு மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை கடக்கும் போது விபத்தில் சிக்கி ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜூன் 22-ம் தேதி (செவ்வாய்க்கிழமை), உலக ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் குறித்த விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் ஆள் இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளில் விபத்துகள் நேராமல் தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு பிரசார நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டுள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலத்தைப் பொறுத்தவரை 2,949 லெவல் கிராசிங்குகள் உள்ளன. இதில் 1,194 லெவல் கிராசிங்குகளில் ரயில்வே ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டும் உள்ள ஆள் இல்லாத லெவல்கிராசிங்குகளின் எண்ணிக்கை 1,070.
தமிழகத்தில் கடந்த 2007-08-ம் ஆண்டில் மட்டும் ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளில் நடந்த விபத்துகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே எடுத்தது.
இதன் பயனாக, ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளில் ஏற்படும் உயிரிழப்பு 2008-09-ல் 5 ஆகவும், 2009-10-ல் ஒன்று ஆகவும் குறைந்தது.
ஆனால், வடக்குக் கோவையில் கடந்த 4-ம் தேதி ரயில்வே லெவல்கிராசிங்கை கடக்க முயன்ற மினி பஸ் மீது, அந்த வழியாக வந்த ரயில் மோதி 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைளை தெற்கு ரயில்வே மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை பாதுகாப்பு அலுவலர் டைட்டஸ் திங்கள்கிழமை கூறியது:
நாடு முழுவதும் இன்னும் 5 ஆண்டுகளில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகள் மூடப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதையொட்டி லெவல் கிராசிங்குகளில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாலங்கள் அமைக்க ரயில்வே துறை முன்னுரிமை அளித்து வருகிறது.
இதற்கான திட்டச் செலவை, ரயில்வே துறை மற்றும் மாநில அரசு ஆகியவை தலா 50 சதவீதம் பகிர்ந்து கொள்கின்றன.இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு (2009-10) ஆளில்லாத 23 லெவல் கிராசிங்குகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் தமிழகத்தில் ஆளில்லாத 46 லெவல் கிராசிங்குகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை கோட்டத்தில் 426 ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகள் உள்ளன.
இதற்கு அடுத்தபடியாக திருச்சி கோட்டத்தில் 399-ம், சேலம் கோட்டத்தில் 144-ம் உள்ளன. சென்னை கோட்டத்தில் 58 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் உள்ளன. ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை கடக்கும் போது, மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அங்குள்ள எச்சரிக்கை பலகைகளை வாகன ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டும். தவறாகக் கணித்து விபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
÷மேலும் வாகனத்தில் எஃப்.எம்., விடியோ சாதனங்களை அதிக ஒலியளவில் வைத்துக் கொண்டு, ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளைக் கடக்கக் கூடாது. இந்தப் பகுதிகளைக் கடக்கும்போது அதிக ஒலியை எழுப்பி எச்சரிக்குமாறு ரயில் என்ஜின் ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் டைட்டஸ்.